சிவனின் வாகனம் ரிஷபம். இவருக்கு நந்திதேவர் என்று பெயர். கைலாயத்தின் காவலாளியாக இருக்கிறார். காளை மாட்டை உயிர் அல்லது ஜீவாத்மாவின் (உலக உயிர்கள்) சின்னம் என்பர். சிவ சன்னதியில் சிவனை நோக்கியபடி காளை படுத்திருக்கும். உயிர்கள் அனைத்தும், சிவபெருமானை அடைவதற்காக, தங்கள் கவனத்தை அவரை நோக்கி செலுத்த வேண்டும் என்பதை இது காட்டுகிறது. காளையை தர்மத்தின் சின்னமாக கருதுவர். தர்மம் என்பது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். காளை மாடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விவசாய ப்பணி செய்கிறது. இது தொண்டு மனப்பான்மையை குறிக்கும். அருமையான தானியத்தை விவசாயிக்கு கொடுத்து விட்டு வெறும் வைக்கோலையும், இலை தழைகளையும் அது சாப்பிடும். இதுபோன்ற மனநிலை மனிதனுக்கும் வர வேண்டும். நம்மிடம் எவ்வளவு உயர்ந்த பொருள் இருந்தாலும், அதை பிறர் நலனுக்காக இழக்க தயங்கக் கூடாது.காளை, அழுத்தம் மிகுந்த நிலத்தை கஷ்டப்பட்டு உழுகிறது. அதற்காக மறுநாள் அது தன் கடமையிலிருந்து விலகுவதில்லை. மனிதனும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், கடமையிலிருந்து விலகக்கூடாது. இதை உலகுக்கு அறிவிக்கவே, காளை மாட்டை தனது வாகனமாக வைத்திருக்கிறார்.