காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ ஏற்பாடுகள் ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2025 11:01
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் அடுத்த மாதம் பிப்ரவரி 21ம் தேதி முதல் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ள நிலையில் இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து கோயில் அலுவலகத்தில் காளஹஸ்தி எம்எல்ஏ சுதி ரெட்டி முன்னிலையில் திருப்பதி மாவட்ட ஆட்சியர் கலெக்டர் வெங்கடேஷ்வர் தலைமையில் கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி கூறியதாவது; இந்த ஆண்டு மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்த ஆண்டு கோயிலில் நடைபெறும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு சுமார் ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து வருகிறோம். இந்த ஆண்டு (அடுத்த மாதம்) பிப்ரவரி 26-ஆம் தேதி மகா சிவராத்திரியும் மார்ச் மூன்றாம் தேதி கிரிவலம் உட்பட சிறப்பு உற்சவங்கள் நடைபெறும் பதிமூன்று நாட்களில் சுமார் 1.50 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப அனைத்து முன்னேற்பாடுகள் செய்வதற்காக அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்று முதல் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கோயில் வேதப் பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து ஆலோசனை நடைபெற்றது. கோயிலுக்கு சாதாரணமாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களோடு கூடுதலாக பக்தர்களும் வருவதால் கோயிலுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூடுதல் வரிசைகள் ஏற்பாடு செய்து, பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயிலில் பக்தர்களுக்கு (டிக்கெட்) நுழைவு கட்டணம் பெற 14 டிக்கெட் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்னை, நாயுடு பேட்டை, வெங்கடகிரி மற்றும் திருப்பதி போன்ற நான்கு வழிகளில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் (பார்க்கிங் ) சிறப்பு நிறுத்தும் இடம் இரண்டு சக்கர வாகனங்கள், கார் மற்றும் பேருந்துகள் நிறுத்தும் இடம் சிறப்பு இடத்தை ஒதுக்கப்பட்டுள்ளது. கோயிலில் பக்தர்களின் வசதிக்காக போதுமான ஆம்புலன்ஸ்கள் மற்றும் (மெடிக்கல் கேம்ப் ) மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் சுலபமாக சாமி தரிசனம் செய்ய ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.