எனக்கே தண்ணி காட்டுறியா? என்ற சொல் வழக்கு எப்படி வந்தது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2018 03:05
சிலர் நம்மை ஏமாற்றினால், ‘என்ன? எனக்கே தண்ணி காட்டுறியா?’ என்று நாம் அவர்களைக் கேட்கிறோம். இந்தச் சொல் வழக்கு முதன் முதலாக வந்தது எப்படி வந்தது தெரியுமா? அக்காலத்தில் குறுநில மன்னன் ஒருவன் ஆவுடையார் கோயில் பகுதி மக்களின் நிலத்தை பறித்துக் கொண்டான். மக்கள் அனைவரும் பேரரசரிடம் சென்று முறையிட்டனர். ஆனால் குறுநில மன்னனோ, “அந்த நிலம் மக்களுடையது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அதைக் காட்டினால் அவர்களுக்கு நிலத்தைத் தந்துவிடுகிறேன்” என்று பேரரசரிடம் தெரிவித்தான். மன்னரின் கேள்விக்கு விடை தெரியாமல் திணறிய மக்கள், சிவபெருமானிடம் உண்மையை வெளிக்கொணர பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் மாறுவேடத்தில் குறுநில மன்னரிடம் சென்று, “தங்கள் நிலம் எத்தகைய தன்மை உடையது?” என்று கேட்க, “அது நீரில்லாத வறண்ட பூமி” என்றான். அதை சிவபெருமான் மறுத்து, “அது செழிப்பான பூமி, இதற்கு ஆதாரம் உண்டு. இதை இப்பொதே நிரூபிக்கிறேன். நிலத்தைத் தோண்டுங்கள், தண்ணீர் வரும்” என்றார்.
அதன்படியே நிலம் தோண்டப்பட, அந்த இடத்திலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. குறுநில மன்னன், தலைகுனிந்து தன் தவறை ஒப்புக் கொண்டான். அதன்பின் நிலம் மக்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. சிவன் தண்ணீரைக் காட்டிய அந்த இடம், ஆவுடையார் கோயிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியை ‘கீழ்நீர்க்காட்டி’ என்றழைக்கின்றனர். இந்தச் சம்பவத்தை கோயிலின் பஞ்சாட்சர மண்டபத்தின் மேல் விதானத்தில் ஓவியமாக வரைந்தும் வைத்துள்ளார்கள். இதிலிருந்துதான் ‘தண்ணி காட்டுறியா?’ என்ற சொல் வழக்கு வந்தது என்றொரு கருத்து நிலவுகிறது.