பதிவு செய்த நாள்
30
மே
2018
04:05
கிருஷ்ணாவதாரத்தின் நோக்கமே, அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவது தான். இதற்காக, பகவான் கிருஷ்ணன் நிகழ்த்திய லீலைகள், கொஞ்ச நஞ்சமல்ல; பாண்டவர்களைக் காக்க, அவர், லீலைகளை நிகழ்த்தி, ’பாண்டவ துாதப் பெருமாள்’ என்ற பெயரில், பூலோகத்தில் வாசம் கொண்ட அக்கோவில், காஞ்சிபுரத்தில் உள்ளது. பாண்டவர்கள் ஐவரில் மூத்தவரான தர்மர், தன் பெரியப்பா மக்களான கவுரவர்களுடன் சூதாடி, நாட்டையும், மனைவியையும் இழந்தார். பாண்டவர்களுக்கு உதவி செய்ய, முன் வந்த பகவான் கிருஷ்ணர், அவர்களுக்காக துாது சென்று, ஆளுக்கொன்று என, ஐந்து வீடாவது தரும்படி, கவுரவர்களில் மூத்தவனான துரியோதனனிடம் கேட்டார். கிருஷ்ணரை அவமானப் படுத்த நினைத்த துரியோதனன், அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழ், ஒரு நிலவறையை உண்டாக்கி, அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்து வைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார்; அவர்கள் திட்டமிட்டபடி நிலவறை சரிய, உள்ளே விழுந்தார், கண்ணன். அங்கே, அவரை, சில மல்யுத்த வீரர்கள் தாக்கினர். அந்த மல்லர்களை அழித்து, விஸ்வரூபம் எடுத்தார், கிருஷ்ணர்.
வெகுகாலத்திற்கு பின், வைசம்பாயனர் எனும் ரிஷியிடம், பாரதக் கதையைக் கேட்க வந்தார், ஜனமேஜயர் என்ற மகாராஜா. அவரிடம் கதை சொல்லி வரும் போது, ’கிருஷ்ணர் துாது சென்றபோது, நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும்; அதற்கான வழிமுறைகளை கூறுங்கள்...’ என வேண்டினார், ஜனமேஜயர். ரிஷி கூறிய அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து, தவம் செய்து, அந்த தரிசனத்தைப் பெற்றார், மகாராஜா. இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்த கிருஷ்ணரின் பெயர், ’துாதஹரி’ என, குறிக்கப்பட்டுள்ளது. 25 அடி உயரமுடைய அவரது சிலை, அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பது எங்கும் காண முடியாத அதிசயம். இவர் அருகில், பாமா - ருக்மணி உள்ளனர். இக்கோவிலில், யோக நிலையில் உள்ளார், நரசிம்மர். பார்வதியின் தந்தை தட்சனுக்கு, 27 மகள்கள்; இவர்களில் ரோகிணி என்பவள், இங்குள்ள கிருஷ்ண பகவானை வழிபட்டு, சந்திரனை கணவனாக அடையும் பேறு பெற்றாள். அவள், தனக்கு விஸ்வரூப தரிசனம் தந்த கிருஷ்ணனை, தினமும் இத்தலத்திற்கு வந்து மறைந்து வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து, தங்களுக்கு ஏற்படும் தோஷம் நீங்க வேண்டுகின்றனர். கிருஷ்ணரே, ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணர் தன் பாதங்களை பூமியில் அழுத்தி இருக்கும் தலம் இது என நம்பப்படுவதால், இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின், 72 ஆயிரம் அங்க நாடிகளும், துடிப்புடன் செயல்படும் என்பர். புதன், சனிக்கிழமைகளிலும், ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதிகளிலும், தமிழ் மாத எட்டாம் தேதிகளிலும் இங்கு வழிபடுவது சிறப்பு. காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவில் அருகில் உள்ளது, இக்கோவில்!