பதிவு செய்த நாள்
10
ஜூலை
2018
03:07
நாம் ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு, அந்தப் பிரார்த்தனை நிறைவேறிய பிறகு, எத்தனை தேங்காய்களை உடைப்பதாக வேண்டிக்கொண்டாமோ அத்தனை தேங்காய்களை உடைப்பது, சிதறுகாய் பிரார்த்தனை ஆகும். சிலர், நல்ல காரியத்தை ஆரம்பிக்கும்போது, அந்தக் காரியம் இடையூறின்றி நல்லபடி வெற்றி அடையவேண்டும் என்பதற்காகவும் சிதறுகாய் உடைப்பதுண்டு. ‘நாளிகேர ப்ராதாட்யோஹம் நிர்விக்னாய ப்ரஸீதமே ’ என்பது சிதறுகாய் உடைக்கும்போது நாம் சொல்லவேண்டிய பிரார்த்தனை மந்திரம். ‘இந்தத் தேங்காயை உடைப்பதால், எல்லாம் வல்ல விக்னேசுவரர், நான் செய்யப்போகும் செயலில் எந்த விக்கினமும் ஏற்படாமல் செய்வாராக ’ என்பதே இந்த மந்திரத்தின் பொருள். சிதறுகாய் உடைக்கப்படும் தேங்காய், துண்டு துண்டாகச் சிதறி உடையும்போது, நம் மனத்திலுள்ள அழுத்தம் விலகி, நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்தத் தேங்காயானது ஏழை எளியவர்களின் உணவாகவும் ஆகிறது. நம்முடைய செயல்களில் ஏற்படக்கூடிய அனைத்து தடங்கல்களையும் போக்கி வெற்றி அடையச் செய்வதற்காகவும், ஏழை எளியவர்களுக்குத் தர்மம் செய்யும் வகையிலும் சிதறுகாய் உடைக்கும் பிரார்த்தனை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தேங்காய் அரிய பல மகத்துவங்களைக் கொண்டது. எல்லாம்வல்ல இறைவனுக்கு அதை நிவேதனமாக அளிப்பது, உயர்ந்த பலனைத் தரவல்லது. தேங்காயின் உள்ளே இருக்கும் வெண்மையை நாம் பார்க்கும்போது, அறியாமை எனும் இருள் அகன்று. ‘சச்சிதானந்த ரூபமான பரம்பொருளுக்குப் பிடித்தது தூய்மையே ’ என்ற உணர்வு மேலோங்கி, நமது உள்ளத்தில் தீய எண்ணங்கள் அகற்றப்பட்டு, நல்ல எண்ணங்கள் மலர்வதை நாம் பூஜை செய்யும்போது உணரலாம். கடுமையான கர்மவினைகளால் சூழப்பட்ட ஆத்மாவின் நிலையைத் தேங்காயின் வெளிப்பாகம் குறிக்கும். கடவுளின் சன்னிதியில் கர்மவினைகளின் தாக்கங்கள் விலக்கப்பட்டு ஆத்மா தூய்மை அடையும். இதையே கடவுள் சன்னிதியில் உடைக்கப்படும் தேங்காய் நமக்கு உணர்த்துகிறது. தேங்காய்கள் அளவில் மாறுப்பட்டாலும் உள்ளே தென்படும் வெண்மையில் மாறுபாடு இருக்காது. அதேபோல், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒரே ஆன்ம ஸ்வரூபம் கொண்டவையே என்ற உயர்ந்த தத்துவத்தை குறிக்கும் வகையில், இறைவனுக்கு ‘தேங்காய் நைவேத்தியம்’ செய்யப்படுகிறது.