பதிவு செய்த நாள்
14
மார்
2019
03:03
அஸ்வபதி என்னும் மன்னர் குழந்தை வரம் வேண்டி 18 ஆண்டுகள் சாவித்திரி தேவியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். சாவித்திரி தேவியும் அவன் முன் தோன்றி, நற்குணமுள்ள பெண் குழந்தை வாய்க்கப் பெறுவாய் என்று வாழ்த்தி அருள்புரிந்தாள். அதன்படி பிறந்த பெண் குழந்தைக்கு, தான் வணங்கிய சாவித்திரியின் பெயரையே வைத்தார் அஸ்வபதி. பருவ வயதை அடைந்த சாவித்திரியிடம் அஸ்வபதி, உனக்கு ஏற்ற கணவரை நீயே தேர்ந்தெடு. அவருக்கே உன்னை மணம் முடித்து வைக்கிறேன், என்று உறுதியளித்தார். சாவித்திரி பல நாடுகளுக்கும் சென்றாள். ஒருமுறை காட்டுப்பகுதிக்கு சென்ற போது அங்கு வாழ்ந்த சாலுவ தேசத்து மன்னரின் மகனான சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்தாள். அவனைத் திருமணம் செய்வதென முடிவு செய்தாள். நாட்டுக்கு திரும்பியதும், தனது தந்தை அஸ்வபதியிடம் தெரிவித்தாள். தந்தையே! நான் சத்தியவான் என்ற இளைஞரை சந்தித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள என் மனம் விரும்புகிறது, என்று தெரிவித்தாள்.
மகளின் விருப்பத்தை நிறைவேற்ற அஸ்வபதியும் முடிவு செய்து, சத்தியவானைப் பற்றி விசாரிக்க தொடங்கினார். முக்காலம் அறிந்த ரிஷியான நாரதர் மூலமாக அந்த இளைஞன் சாலுவ தேசத்து ராஜகுமாரன் என்றும், அற்ப ஆயுள் கொண்டவன் என்றும் அறிந்து கொண்டார். அற்ப ஆயுள் கொண்ட ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று அஸ்வபதி புத்திமதி கூறியும், சாவித்திரி தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சத்தியவானுக்கும், சாவித்திரிக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். சாவித்திரி பார்வையற்ற தன் மாமனார், மாமியாருக்கு தகுந்த சேவை செய்து வந்தாள். இந்நிலையில் சத்தியவானின் இறுதிநாள் வந்தது. அவன் தன் பெற்றோருக்காக உணவு கொண்டு வர காட்டுக்கு சென்றான். சாவித்திரியும் உடன் சென்றாள். அந்த சமயத்தில் எமன் பாசக்கயிற்றை சத்தியவான் மீது வீசி உயிரை பறித்தான். யார் கண்ணுக்கும் புலப்படாத எமன், பதிவிரதையான சாவித்திரியின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை.
அவனை பின் தொடர்ந்தாள் சாவித்திரி. அவளைக் கண்டு அதிர்ச்சியுற்ற எமன், பெண்ணே..... மானிடப்பெண்ணான நீ என்னை பின்தொடர்வது கூடாது. கற்புக்கரசியான உனக்கு விருப்பமான வரத்தை இப்போதே அளிக்கிறேன், என்று உறுதியளித்தான். அதற்கு சாவித்திரி, எனக்கு நுõறு குழந்தைகள் பிறக்க வேண்டும், என்று வரம் கேட்டாள். சற்றும் யோசிக்காமல் எமதர்மன், அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு நகர்ந்தார். வழிமறித்த சாவித்திரி, நீங்கள் அளித்த வரம் உண்மையானால், எனக்கு குழந்தை பிறக்க என் கணவரைத் திருப்பிக் கொடுங்கள், என்றாள். வாக்கை மீற முடியாத எமனும் சத்தியவானுக்கு உயிர் அளித்து புறப்பட்டான். கணவரை உயிருடன் மீட்ட சாவித்திரியைக் கண்ட அனைவரும் அதிசயித்தனர். அவளின் நினைவாக மாசியும், பங்குனியும் இணையும் நல்ல நாளில் சாவித்திரி விரதம் என்னும் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. மணமான பெண்கள் சாவித்திரியை மனதால் நினைத்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியமும், கன்னியருக்கு நல்ல கணவனும் அமைவார்கள் என்பது ஐதீகம்.
தாலி பாக்யம் காத்திடும் விரதம்: திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் தீர்க்க சுமங்கலியாக வாழவேண்டும் என்பதே முக்கியமான விருப்பமாக இருக்கும். கன்னிப்பெண்கள், நல்ல கணவன் தங்களுக்கு வாய்த்திட வேண்டும் என்று விரும்புவர். மணமான பெண்கள், தீர்க்க சுமங்கலி வரம் வேண்டியும்; கன்னியர், மனதுக்குப் பிடித்த மணவாளன் கிட்ட வேண்டியும் செய்யும் விரதமே காரடையான் நோன்பு. இந்த நோன்பு நோற்கப்படுவதற்குக் காரணமாக புராணக் கதை ஒன்று உண்டு.
“அரசன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி அவளுக்கு மணம் செய்விக்க எண்ணி, மகளிடம், “உன் மனம் கவர்ந்தவன் யாரென்று சொல்?” என அரசன் கேட்க, அவளோ ஆட்சியை இழந்து காட்டில் வாழ்ந்து வந்த சத்யவானையே தான் விரும்புவதாகக் கூறினாள். நாரதரோ, ‘சத்யவானின் விதிப்படி அவன் இன்னும் ஓராண்டுக் காலமே உயிரோடு இருப்பான்’ என்று எடுத்துச் சொல்லியும் உறுதியாக இருந்து அவனையே மணம் முடித்தாள். காட்டில், சாவித்திரி, தன் மாங்கல்ய பலம் வேண்டி நோன்பு நோற்றாள். காட்டில் தனக்குக் கிடைத்த அறுகம்புல், அரச இலைகள் ஆகியவற்றைப் பூவாகவும், காட்டில் விளைந்த கார் அரிசியையும் துவரையையும் கொண்டு செய்த அடையையே நைவேத்யமாகவும் வைத்தாள். ‘காரடையான் நோன்பு’ என்ற பெயர் வர இதுவும் ஒரு காரணமென்பர். இதனை மங்கள கவுரி விரதம், சாவித்திரி நோன்பு எனவும் கூறுவர்.
விதிப்படி சத்யவானின் ஆயுள் முடியும் நாளும் வந்தது. சாவித்திரி தன் கணவனைப் பிரியாது, அவனுடனேயே இருந்தாள். சத்யவானின் உயிரைப் பறித்துப் பறந்தார், எமதர்மன். தனது கற்பின் திறத்தால் அவரைப் பின் தொடர்ந்தாள், சாவித்திரி. மானுடப் பெண் ஒருத்தி கூடவே வருவதைக் கண்ட தர்மதேவன் நின்று திரும்பிப் பார்த்தார். சாவித்தி அவரை பக்தியுடன் வணங்கினாள். ஆசிர்வதித்த அவர், “சாவித்திரி, நீ இத்தனை நாட்கள் செய்த நோன்பில் மகிழ்ந்து நான் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள்” என்றார். முதலிரண்டு வரங்களால் தன் கணவரது தந்தை இழந்த நாட்டினையும் கண்களையும் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டவள், மூன்றாவது வரத்தினை சமயோஜிதமாக, “எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்” எனக் கேட்டாள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமெனில் சத்யவானின் உயிரை தான் கவர்ந்து செல்ல முடியாது என்று உணர்ந்த எமதர்மன், சாவித்திரியின் தைரியத்தையும், சாதுர்யத்தையும், பதிபக்தியையும் பாராட்டி, சத்யவானின் உயிரைத் திருப்பி அளித்துச் சென்றார். எமதர்மனிடமிருந்து சாவித்ரி தன் கணவனின் உயிரை மீட்டது, மாசிமாதம் முடிந்து பங்குனி பிறக்கும் சமயத்தில் நிகழ்ந்தது என்பர். இந்த நோன்பு அவ்வாறே மாசி முடிந்து பங்குனி மாதம் (ஒரு நாளில்) எப்பொழுது தொடங்குகிறதோ, அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்பது விரதவிதி. வயதில் முதிர்ந்த பெண்கள், இதை ‘ரெண்டாங்கெட்டான் நோன்பு’ என்றும் விளையாட்டாகச் சொல்வர் ஏனெனில் வடியற்காலை தொடங்கி நடுநிசி வரை எந்த நேரம் நேரத்தில் வேண்டுமானாலும் இந்த நோன்பு நேரம் அமையும் என்பதோடு, மாசியாகவும் இல்லாமல் பங்குனியாகவும் இல்லாமல் இரண்டு சேரும் நேரமாக இருக்கும் என்பதுதான்.
பொதுவாகவே ‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்று சொல்வார்கள். அதாவது, திருமணமான பெண்கள் மாசி மாதத்தில் தங்களுடைய தாலிக்கயிறை மாற்றிக் கொண்டால், அவர்களது கணவனின் ஆயுள் நிலைக்கும். பாசிபடியும்வரை, அதாவது பலகாலம் மாங்கல்யம் நிலைக்கும் என்று அர்த்தம். எனவே இந்த நோன்பு இருந்து சரடு கட்டிக் கொண்டாலும், வழக்கமாக மாற்றும் தாலிச் சரடினையும் மாசியில் மாற்றிக் கொள்வது மரபு. பெண்கள் தங்கள் கணவனை விட்டுப் பிரியாது, சுமங்கலியாக வாழ வேண்டி காரடையான் நோன்பின் சரடைக் கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். இதனை கணவர் கையால் கட்டிக் கொள்வது விசேஷம். அவ்வாறு கட்டிக் கொள்ளும்போது,
‘தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராமி
அஹம் பர்த்து:
ஆயுஷ்ய ஸித்தார்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா’
என்ற ஸ்லோகத்தைச் சொல்வது அவசியம். அல்லது அதே அர்த்தத்தில், “உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான் வைத்து, நோன்பு நோற்றேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்” என்று வேண்டியபடியே நோன்புச் சரடினைக் கட்டிக் கொள்ளவேண்டும். வெற்றிலை - பாக்கு, வெண்ணெய், அரிசியில் செய்யப்பட்ட வெல்ல அடை, கார அடையே இதன் நைவேத்யமாகும்.