பதிவு செய்த நாள்
18
ஜன
2025
05:01
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர்கள் கட்டும் பணி துவங்கியது.
விருத்தாசலத்தில் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் விமர்சையாக நடப்பது வழக்கம். மாசி மகத்தன்று லட்சக்கணக்கானோர் மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சுவாமியை வழிபடுவர்.அதன்படி, மாசிமகத்தை முன்னிட்டு, காவல் தெய்வங்களான அய்யனார் சுவாமிக்கு, வரும் பிப்., 10ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (11ம் தேதி) செல்லியம்மனுக்கு காப்பு கட்டி, தினசரி சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து, அம்மாதம் 18ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
21ம் தேதி ஆழத்து விநாயகருக்கு கொடியேற்றமும், மார்ச் 1ம் தேதி தேரோட்டம், 2ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. மார்ச் 3ம் தேதி விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு மாசிமக பிரம்மோற்சவ கொடியேற்றம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக மார்ச் 8ம் தேதி விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சியளிக்கும் ஐதீக நிகழ்வு; 11ம் தேதி பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி மாசிமகம், மாலை தீர்த்தவாரி, 13ம் தேதி தெப்பல் உற்சவமும், 24ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு, செல்லியம்மன், ஆழத்து விநாயகர் தேரோட்டத்திற்கு தேர்கள் கட்டும் பணி துவங்கியுள்ளது.