பதிவு செய்த நாள்
18
ஜன
2025
05:01
கடலுார்; கடலுார் மற்றும் பண்ருட்டி பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக நடந்தது.
பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று ஆற்றுத்திருவிழா நடந்தது. கடலுார் மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாற்றில் நடந்த விழாவில் கடலுாரில் பாடலீஸ்வரர், வண்டிப்பாளையம் சுப்ரமணியர், மஞ்சக்குப்பம் முத்துமாரியம்மன், ஆனைக்குப்பம் நாகவள்ளியம்மன், தாழங்குடா மாரியம்மன் உட்பட சுற்றுப்பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடந்தது.
முன்னதாக அலங்கரிக்க சுவாமிகள், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டன. தீர்த்தவாரி முடிந்து, பொதுமக்கள் வழிபாட்டிற்காக வரிசையாக நிறுத்தப்பட்டன. ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளி, கல்லுாரி விடுமுறை என்பதால் குழந்தைகள், மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் வைத்து போலீசார் கண்காணித்ததுடன், ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. திருவிழாவில் கடைகள் மற்றும் சிறுவர்கள் மகிழ ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
பண்ருட்டி; பண்ருட்டி கெடிலம் மற்றும் கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடந்தது. கெடிலம் நதிக்கரையில் பண்ருட்டி படைவீட்டம்மன் காவில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 30 கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமி தீர்த்தவாரியில் எழுந்தருளின. சிறுவர்கள் விளையாடுவதற்கான ராட்டினங்கள், பொழுதுபோக்கு விளையாட்டுகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன. பண்ருட்டி கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் நடந்த விழாவில் வளவனுார் உள்ளிட்ட பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் தீர்த்தவாரிக்கு கொண்டுவரப்பட்டன. ராட்சத ராட்டினங்கள் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். விழாவில் ஆயிரக்க்கனக்கான மக்கள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலுார் , விழுப்புரம் மாவட்ட போலீசார் செய்திருந்தனர்.