ஆயிரம் முனிவர்களை ஒரே நேரத்தில் தின்ன திட்டமிட்டது கற்கிமுனி என்னும் பூதம். அதற்காக சிவபூஜையில் கவனக்குறைவாக இருந்தவர்களை சிறையில் அடைக்க தொடங்கியது. ஒரு வழியாக 999 முனிவர்கள் பிடிபட்டனர். இன்னும் ஒருவருக்காக காத்திருந்தது பூதம்.
இந்த நேரத்தில் நக்கீரர் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் வந்தார். பொய்கையில் நீராடிய அவர் ஒரு ஆலமரத்தடியில் சிவபூஜைக்காக அமர்ந்தார். அந்த மரத்தின் இலைகள் காற்றில் உதிர்ந்தால் பறவையாகவும், நீரில் விழுந்தால் மீனாகவும் மாறி விடும் தன்மை கொண்டவை. நக்கீரர் பார்த்த போது இலை ஒன்று, நீரிலும் தரையிலுமாக விழுந்தது. ஒரு பாதி மீனாகவும், மறு பாதி பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தன. இந்த அதிசயம் கண்ட நக்கீரர் தன்னை மறந்து வேடிக்கை பார்த்தார். பூதம் நக்கீரரையும் சிறையில் அடைத்தது. அங்கிருந்த முனிவர்கள், “நக்கீரரே... ஒருவர் குறைவாக இருந்ததால் இதுவரை நாங்கள் உயிருடன் இருந்தோம். இனி ஆயிரமாகி விட்டதால் பூதத்துக்கு நாம் எல்லோரும் இரையாகப் போகிறோம்” என கூறினர். உடனே முருகன் மீது ’திருமுருகாற்றுப்படை’யை நக்கீரர் பாட, அங்கு தோன்றிய முருகன், பூதத்தைக் கொன்றார். பூதம் தீண்டியதால் ஏற்பட்ட பாவம் தீர கங்கையில் நீராட விரும்பினார் நக்கீரர். ஒரு பாறையைக் கீறிய முருகன் கங்கையை வரவழைத்தார். அதில் நீராடிய நக்கீரருக்கு முருகனருளால் குறை தீர்ந்தது. பங்குனி உத்திர நன்னாளில் இங்கு வழிபடுவோரின் குறையனைத்தும் தீரும்.