மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறேன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா! என்று வேண்டிக்கொண்டு இந்த விரதத்தை ஆரம்பிக்கவேண்டும். அவரவர் வசதிப்படி கர்ப்பக்கால விரதம் அல்லது ஜனனகால விரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே சிறந்தது. கர்ப்பக்கால விரதம் எடுப்பவர்கள். ராமநவமி வருவதற்கு முந்தைய அமாவாசை அன்றிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நீராடி ராமர் படத்துக்குப் பூவும் பொட்டு வைத்து வணங்கவேண்டும்.
குறைந்தது 108 முறை ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று மனதார உச்சரிக்கவேண்டும். பின்னர், வழக்கமாகன பணிகளுக்குச் செல்லலாம். பகலில் ஒரே ஒரு முறை மட்டும் சைவ உணவை உண்ணலாம். மற்ற நேரங்களில் பால், பழம், மோர் அருந்தலாம். புகையிலை, வெற்றிலை பாக்கு போன்றவற்றைக் கட்டாயமாக விலக்கவேண்டும்.
ஸ்ரீராமநவமி அன்று ராமர் படத்தை அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடவேண்டும். பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்தி ஸ்ரீராமஜெயம் என்று 108,1008 என அவரவர் வசதிப்படி எழுதலாம். நீர் மோர் பானகம் ஆகியவற்றோடு சிறப்பான விருந்து சமையலும் செய்து ராமருக்குப் படைக்க வேண்டும். நிறைவாக வடையையும், வெற்றிலையையும் அனுமனுக்குப் படைக்க வேண்டும். பின்னர் விரதத்தை நிறைவு செய்துவிட்டேன். நல்லவை யாவும் அருளிக் காப்பாயாக! என்று வேண்டிக்கொண்டு உணவு அருந்தலாம். அன்றைய தினம் கட்டாயம் நீர் மோரும், பானகமும் பருக வேண்டும். அன்று இரவு லேசான உணவாக எடுத்துக்கொள்ளுதல் நலம்.
இப்படி ஸ்ரீராமநவமி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் மனநிம்மிதி, வெற்றி, செல்வம் ஆகியவை பெருகும். இதே விரதத்தை ஜனனகால விரதமாக (இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வதுண்டு) அனுஷ்டிக்க நினைப்பவர்கள் ஸ்ரீராமநவமியிலிருந்து தொடங்கி ஒன்பது நாட்கள் மேற்சொன்னபடி விரதம் இருக்கவேண்டும். பத்தாம் நாளன்று காலை ராமருக்கு வழிபாடுகள் செய்து கல்யாண சமையல்போல விருந்துணவு செய்து படைக்க வேண்டும். நிறைவில் வடையும் வெற்றிலையும் அனுமனுக்கு சமர்ப்பணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இந்த வகையில் விரதத்தைக் கடைப்பிடித்தால் திருமணத் தடைகள் நீங்கும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். மனக்குழப்பங்கள் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும்.