பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
02:06
சிரகிரி, சிவகிரி, முருகப்பெருமான் குரு அம்சமாக அருள் பாலிப்பதால் குருமலை, குரு கிரி, கோயிலே கட்டுமலை அமைப்புடன் அழகுற காட்சி தருவதால் சுந்தராசலம், நெல்லி (தாத்ரி) மரத்தைத் தல மரமாகப் பெற்றதால் தாத்ரிகிரி ஆகிய சிறப்புப்பெயர்களோடு திகழும் திருத்தலம் சுவாமிமலை. அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் தந்த தலம் இது. இதையே அவர், "முதுமறைக்குளருமா பொருட்டுள் மொழியே யுரைத்த தகையா தெனக்குனடி காணவைத்த தனியேரகத்தின் முருகோனே! என்று பாடியுள்ளார். "குரோசம் என்பது, கூப்பிடு தூரத்தில் உள்ள அளவு. இப்படி, கும்பகோணத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள ஐந்து தலங்களை பஞ்ச குரோசத் தலங்கள் என்பர். அவற்றில் சுவாமிமலையும் ஒன்று. மற்றவை திருவிடைமருதூர், திருப்பாடலவனம், தாராசுரம், திருநாகேஸ்வரம், ஈசனுக்கு முருகப்பெருமான் பிரணவப்பொருள் உபதேசித்த தலமும் இதுவே.
முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவனார், தம் உள்ளத்தில் உவகை பொங்கிட... தன் மகனை "நீயே சுவாமி! என்று கூறினாராம். இதனால் இந்தத் தலம் சுவாமிமலை எனும் பெயர் பெற்றது. முருகப் பெருமான் ஸ்வாமிநாத ஸ்வாமி மற்றும் தகப்பன் ஸ்வாமி ஆகிய திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டார்.
இத்தலம் குறித்த வேறொரு திருக்கதையையும் ஞானநூல்கள் சொல்கின்றன. பிருகு முனிவரோடு தொடர்புடையது அந்தக் கதை.
ஒரு முறை "பிருகு மகரிஷி தீவிர தவத்தில் ஆழ்ந்தார். தனது தவத்துக்குத் தடை ஏற்படுத்துபவர்கள் ஏவராக இருந்தாலும் அவர்கள் தம் சிறப்பை இழப்பார்கள் என்று ஆணையிட்டிருந்தார்.
அவரது தவ வலிமையால் அகில உலகமும் தகித்தது. தேவர்கள் அனைவரும் சிவனாரை வேண்ட... அவர் பிருகு முனிவரின் தலையில் கை வைத்து தகிப்பை கட்டுப்படுத்தினார். இதனால் தவம் கலைந்தது. முனிவரது ஆணைப்படி சிவனார் பிரணவ மந்திரத்தை மறந்தார். இதன் பிறகு, பிரம்மனுடன் முருகப் பெருமான் நிகழ்த்திய அருளாடலின் போது, அவரிடமே பிரணவப் பொருள் உபதேசம் பெற்றார் ஈசன். இந்தப் பெருமை சுவாமிமலை திருத்தலத்தையே சாரும், தந்தைக்கு வலக் காதில் பிரணவப் பொருள் உபதேசித்த வேலவன், தன் தாயாகிய பராசக்தியும் அதன் அர்த்தத்தை அறிய வேண்டும் என்பதற்காக சிவனாரின் இடக் காதிலும் உபதேசம் செய்தார் என்கிறது புராணம்.