திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து படவேடு செல்லும் சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காமக்கூர் திருத்தலம். முருகப் பெருமான், சந்திரன், அர்ஜுனன் மற்றும் ரதிதேவி சிவபெருமானை வழிபட்ட தலம் இது. ஆதிசங்கரர் சக்ர பிரதிஷ்டை செய்த தலங்களுள் இதுவும் ஒன்றாம், சிவனார் தாண்டவமாடிய தலங்களில் ஒன்று என்பதால், இந்தத் தலத்தை உப விடங்கத் தலம் என்கிறார்கள். பரமன், இங்கே சதுர தாண்டவம் ஆடியதாக விவரிக்கிறது. காமாத்தூர் புராணம். கால்கள் இரண்டையும் மடக்கி, முன்னும் பின்னுமாக சதுர வடிவில் வைத்தபடி ஆடும் அரிய கோலத்தில் காட்சி தரும் சதுர தாண்டவ நடராஜரை தரிசித்து வணங்குவதால், பெரும் வல்லமையும் பேராற்றலும் கிடைக்கும்; கலைகளில் ஆர்வமும் திறனும் ஏற்படும் என்கிறார்கள்.