Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆதிகோரக்க நாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆதிகோரக்க நாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆதிகோரக்க நாதர் (பீடத்தில் விநாயகர்)
  தல விருட்சம்: புளியமரம்
  ஊர்: திருப்புவனம்
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 தல சிறப்பு:
     
  இந்து குடும்பங்களில் முஸ்லிம் பெயர் சூட்டுவது இந்த கோயிலில் மட்டும்தான் என்பது சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆதிகோரக்க நாதர் திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை.  
   
போன்:
   
  +91 98942 67182 , 99948 39547 
    
 பொது தகவல்:
     
  மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 14 வது கி.மீ., உள்ளது திருப்புவனம் நகரம். இங்கு புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோயில்  அமைந்துள்ளது. இதன் அருகில்  ஆதிகோரக்க நாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆங்காரமான அய்யனார், காளி போன்ற கோயில்களில்தான் வாயை கட்டி கொண்டு பூஜை செய்வார்கள், இங்கு விநாயகர் கோயிலில் வாயை கட்டி கொண்டு பூஜை செய்வதை காணலாம். அது போல திருநீறு இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. குழந்தை வரம் வேண்டி வரும் பெண்கள் இங்கு பிரசாதமாக தரப்படும் விபூதியை பாலில் கலந்து அருந்தினால் குழந்தை வரம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இங்கு உள்ள புளிய மரம் 130 வருடங்களை கடந்து நிற்கிறது. கோரக்கநாதர் இந்த புளியமரத்தடியில் அமர்ந்துதான் தனது சீடர் பட்டாணி ராவுத்தருடன் தவம் செய்ததாக கூறப்படுகிறது. இன்றளவும் புளிய மரத்தடியில் பட்டாணிராவுத்தர் சன்னதி என பெயர் பலகை உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த புளிய மரத்தடியில் இருந்தவாறு புஷ்பவனேஸ்வரரை நோக்கி கோரக்கநாதர் தவம் செய்ததாக வரலாறு உள்ளது. மேலும் கோரக்கநாதர், பட்டாணி ராவுத்தர், சப்த கன்னிமார்கள் பிராமனி, மகேஸ்வரி, இந்துராணி, சாமுண்டி, கௌமாரி, வராஹி, வைஷ்ணவி ஆகியோருக்கு தனி சன்னதி உண்டு.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டிய வரம் நிறைவேறினால் அன்னதானம் வழங்குவது இங்கு சிறப்பு. 
    
 தலபெருமை:
     
  காசியை விட வீசம் பெரியது என போற்றப்படும் இத்தலத்தில் சித்தர் தவம் இருந்த ஆதிகோரக்க நாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்தரை குருநாதராக ஏற்று கொண்டு வழிபட்ட இஸ்லாமிய பெரியவர் பட்டாணிராவுத்தரின் ஜீவசமாதியும் உள்ளது. தமிழகத்திலேயே இந்து சித்தர் கோயிலில் இஸ்லாமிய பெரியவரின் ஜீவசமாதி உள்ளது இங்கு மட்டும்தான். இக்கோயிலில் பரம்பரை பரம்பரையாக வழிபடும் பக்தர்கள் தங்களது முதல் குழந்தைக்கு ஆதி, கோரக்கநாதர் என்ற பெயரும், இரண்டாவது குழந்தைக்கு பட்டாணி ராவுத்தர் என்றும் பெயர் சூட்டுகின்றனர். இந்து குடும்பங்களில் முஸ்லிம் பெயர் சூட்டுவது இந்த கோயிலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சித்தர் கோயிலில் பொதுவாக சிவன்தான் அருள்பாலிப்பார். ஆனால் இங்கு விநாயகர் அருள்பாலித்து வருகிறார். விநாயகரை மூலவராக வழிபடும் சித்தர் கோயில் இது ஒன்றுதான்.  
     
  தல வரலாறு:
     
  சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் குழந்தை வரம் தரும் சித்தர் கோயில் உள்ளது. மச்சேந்திர நாதர் இந்த மஹாத்மா தீர்த்தயாத்திரை செய்து கொண்டு அனேக புண்ய தீர்த்தங்களில் மூழ்கி திவ்ய திருப்பதிகளில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய பகவத்ரூபங்களை தரிசித்து பிச்சை எடுத்து பிழைத்து ஓரிடத்திற் பொருந்திராமல் நாட்களைக் கழிப்பாராயினார். ஒருநாள் இவர் கோரக்பூரில் ஒரு வர்த்தகன் வீட்டுக்கு போய் இச்சையற்றவனுக்குப் பிச்சை போடு என்றார். அவ்வர்த்தகன் மனைவி அன்னங்கொண்டு வந்து அவர்க்குக் கொடுத்து காஷாய், தாராய் நீறுபூசின மேனிப்பொலிவுடன் விளங்கிய அவரைக் கண்டு இவர் யாரோ மஹாத்மாவாக இருக்க வேண்டும் என்றெண்ணி, ஓ ஸாது சிகாமணி தேவரீர், எங்கிருந்து எங்குச் செல்கின்றீர் யான் செய்த புண்ணிய விசேடத்தால், தேவரீர், இங்கெழுந்தருளினீர் என இனியமொழி கூறி வணங்கி நின்றாள். அவளைக் கண்ட மச்சேந்திரர் அம்மணி நான் பரதேசி எனக்கென்று ஓரிடம் இல்லை. தீர்த்த யாத்திரை செய்கின்றேன். ஆசை இல்லேன் என்று கூறக்கேட்ட அவ்வர்த்தகன் மனைவி ஓ மகாத்மா எங்களுக்கு ஏராளமான திரவியம் இருந்தும் புத்ர பாக்கியம் இல்லாதபடியால் எங்கள் வீடு, சந்திரன் இல்லாவானம் போல் பொலிவற்றிருக்கின்றது. ஆகையால் எனக்கு ஸந்தானம் உண்டாகும்படி அனுக்கிரகம் செய்ய வேண்டும் என வேண்டினாள்.

அவர் அவள் மேற்கிருபை கூர்ந்து ஒரு சிட்டிகை விபூதியை அவள் கரத்தில் இட்டு இதனை வாயில் போட்டுக்கொள். உனக்கு விஷ்ணுவைப் போல் ஒருபுத்திரன் பிறப்பான் எனக் கூறி தம் வழியே சென்றார். அவ்வர்த்தகன் மனைவி மச்சேந்திரநாதர் அனுக்கிரகித்துக் கொடுத்த விபூதியை உடனே வாயில் போட்டுக் கொள்ளாமல் தனக்கு நேசமான பெண்களுடன் அவ்விபூதி கிடைத்த விபரத்தை கூறினாள். அவர்கள் பெண்களாகையால் பெருமிதமான குணத்தை விட்டு பேதமை குணத்தால் சன்னியாசிகளை நம்பக்கூடாது. சொக்குப்பொடி போட்டு மனிதரை மயக்கி வசப்படுத்துபவர் என்று சொல்ல அவ்வார்த்தைகளை உண்மையென நம்பி அவள் அந்த விபூதியை அடுப்பில் போட்டாள். பனிரெண்டு வருடங்களுக்கு பிறகு மச்சேந்திரர் கோரக்பூர் வந்து வர்த்தகன் வீட்டுக்குப் போய் இச்சையற்றவனக்குப் பிச்சையிடுங்கள். என்று கேட்க, வர்த்தகன் மனைவி அன்னங்கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது இந்தப்புண்ய புருஷர் அந்த மாதை நோக்கி நான் தந்த விபூதியால் உண்டான புத்திரனைக்கான விரும்புகின்றேன் என்றார். அப்பெண்மணி அத்திருநீர் பற்றி பேசினால் இவர் சபிப்பார். என்றெண்ணி பயந்து மறுமொழி கூறாதிருந்தாள்.

மச்சேந்திரநாதர் ஓ மாதற்கரசி நீ அஞ்சற்தக்க விபூதியை என்ன செய்தாய் உண்மையைச் சொல் என்றார். அவ்வனிதை மதியீனத்தால் நான் அதனை உட்கொள்ளாமல் அடுப்பில் எரித்தேன். என்று கூறினாள். அதுகேட்ட மச்சேந்திரநாதர் நடந்ததைக் குறித்து கவலைப்பட வேண்டாம். அவ்வடுப்புச் சாம்பலை எங்கே கொட்டிவைத்தாய் என்று கேட்க அவ்வனிதை தான் நிதம் சாம்பலைக் கொட்டி வைக்கும் குப்பை மேட்டைக் காட்டினாள். அப்போது அவ்வுத்தமர் அக்குப்பை மேட்டின் மேல் நின்று ஓ பற்றற்ற பரமயோகி என அழைத்தார். உடனே அக்குப்பைக்குள் இருந்து குருநாதர் வந்தேன் வந்தேன் என்று திருவாக்கு பிறந்தது. மச்சேந்திரநாதர் அவ்வூராரை அழைத்து அந்த குப்பை மேட்டைக் கிளறினபோது பன்னீராடைப் பருவத்தினராய் திவ்ய திருமேனிப் பொலிவுடையவராய் அழகெல்லாம் திரண்டு உருண்ட முகமுடையவராய் வீற்றிருந்த ஒரு சிறுவர் தோன்றினார். அவரைக் கண்டோர் அனைவரும் அதிசயத்தார்கள். மச்சேந்திரநாதர் அப்பரம புருஷரிடத்துச் சென்று தமது கரத்தை அவர் சிரசிற் சேர்த்து பொறுமையோடு உற்றுணர்க என்று கூற அச்சிறுவர் எழுந்து மச்சேந்திர நாதருக்கு ஸாஸ்டாங்க வந்தனம் செய்தார். மச்சேந்திரநாதர் அச்சிறுவர்க்கு அருள்புரிந்து பன்னிரு ஆண்டு பூமாதேவியின் கர்ப்பத்தில் காக்கப்பட்டிருந்ததனால் கோரக்கிநாதர் என நாமகரணஞ்சூட்டி அவரைக் கைப்பற்றிக் கொண்டு நடந்தார். அப்போது வர்த்தகன் இவ்வதிசயத்தைக் கண்டு கைக்கெட்டின பலனை அடைய பெரியோர் அருள் கிடைத்தும் தப்பிப்போய்விட்டது. என சோகமடைந்து தனது மனைவியாளுடன் மச்சேந்திரநாதரை வணங்கி ஓ ஸ்வாமி தேவரீருடைய திருவருட்பிரசாதத்தை நம்ப வகையறியாமல் விலையில்லா மாணிக்கத்தை வீணாயிழந்தோம்.

எங்களைப் போன்ற நிர்பாக்கியவான்கள் யாவர் இந்த ஏழைக்கு இறங்க வேண்டும் ஐயனே என பிரார்த்தித்தான். மச்சேந்திரர் கருணை கூர்ந்து பயப்படாதீர்கள். பகவத் கடாஷத்தால் உங்களுக்குப் புத்திரன் பிறப்பான் என்று அனுக்கிரகித்து கோரக்கிநாதரை அழைத்துக் கொண்டு தமது வழியே சென்றார். கோரக்கிநாதர் மச்சேந்திரரை நோக்கி பிறவி வலையிற்பட்டவனாகிய எனக்கு ஸ்ரீதாரகமந்திரத்தை உபதேசித்தருள்க என பிரார்த்தித்தார். அதற்கு அவர் ஓ வத்ஸா சிறிது காலம் சென்றபின் உனக்கு பரிபக்குவ காலம் வரும். அப்போது நீ ஸ்ரீதாரக மந்திர தேசத்திற்கு அதிகாரியாவாய் எனக்கூற கோரக்கிநாதர் அப்படியே செய்தருள்க என ஆச்சாரியாரை பின் தொடர்ந்து சென்றார். காசியிலிருந்து கோரக்கிநாதர் யாத்திரை செய்யும் போது பட்டாணி பிச்சை இராவுத்தர் கோரக்கரைச் சந்தித்தார்கள். கோரக்கர் காசியாத்திரையை முடித்துக்கொண்டு திருப்புவனம் கோரக்கர் ஆசிரமம் அமைத்து சகல சவுபாக்கியமும் வழங்கிக்கொண்டு சதுரகிரி மகாலிங்கம், இராமேஸ்வரம் யாத்திரை செய்து தேவிப்பட்டினம் சப்தகன்னியர் கூட யாத்திரை முடித்துக்கொண்டு திருப்புவனம் கோரக்கர்  ஆசிரமம் அமைத்தல், நவகோடி சித்தர்களில் முதல்வர் கோரக்கர்நாதர் மேற்கண்ட ஆசிரமம் அமைத்து சகல சவுபாக்கியமும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இந்து குடும்பங்களில் முஸ்லிம் பெயர் சூட்டுவது இந்த கோயிலில் மட்டும்தான் என்பது சிறப்புமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.