Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், இது ஒரு சிவ தலம் என்றாலும் இங்கு சுப்ரமணியசுவாமி பிரதானம்
  உற்சவர்: சுப்ரமணியசுவாமி
  அம்மன்/தாயார்: பெரியநாயகி
  தல விருட்சம்: வன்னிமரம்
  தீர்த்தம்: குமாரதீர்த்தம்
  புராண பெயர்: சமீவனம்
  ஊர்: எண்கண்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

திருப்புகழ்





 
     
 திருவிழா:
     
  தைப்பூசம் - பிரம்மோற்சவம் - 14 நாட்கள் திருவிழா - தேரோட்டத்துடன் சிறப்பாக நடைபெறும். பிருகு முனிவரின் சாபத்தால் சிம்மவர்ம மன்னனுக்கு ஏற்பட்ட சிங்கமுகம் மாறி மனித உருவம் திரும்ப பெற, சிம்மவர்ம மன்னன் தினசரி விருத்த காவிரியில் (வொட்டாற்றில்) நீராடி எண்கண் வேலவனை தரிசித்துவர சிம்மவர்மனுக்கு தைப்பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடிய சுபதினத்தில் முருகன் மயில்மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அவனுக்கு சாப விமோசனம் அளித்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் தோள்களில் காவடி சுமந்து வந்து காணிக்கை செலுத்துகிறார்கள். ஒவ்வொரு மாதமும் மாதாந்தர கார்த்திகை தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். ஐப்பசி - கந்த சஷ்டி - 8 நாள் திருவழா. தவிர ஆடிக் கார்த்திகை, திருக்கார்த்திகை, மாசி கார்த்திகை, மாசிமகம், தை கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசம். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேஷ ஆராதனைகளும் நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோயிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது. சிக்கல் (பொறவாச்சேரி ), எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப்பெருமான் சிலைகள் மூன்றும் ஒரே சிற்பியினால் வடிக்கப்பெற்றது. மூலவரான ஆறுமுகப்பெருமான் சிற்பத்தின் சிறப்பு முழுமூர்த்தத்தின் எடை முழுவதையும் ஊன்றி இருக்கும் மயிலின் ஒன்றைக்கால் தாங்கி இருக்கிறது. இது போன்ற சிற்பத்தை காண்பதரிது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் எண்கண்-612 603 திருவாரூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 -4366-278 531, 278 014, 94884 15137 
    
 பொது தகவல்:
     
  இரண்டாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. இது சிவன் கோயில் என்றாலம் இங்கு முருகனே பிரதானம். இங்குள்ள மூலவர் பிரமபுரீசுவரர் என்ற திருநாமத்துடனும், விநாயகர் நர்த்தனகணபதி என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  கண்நோயுற்றவர்கள் வழிபட்டு கண்நோய் நீங்கி நலனை அடைகின்றனர். செவ்வாய் கிழமை விரதமிருந்து வழிபடுவோர் சரீர நோய் நீங்கப் பெற்று நல்ல உடல் நலத்துடன் வாழ்வர். கார்த்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து வழிபடுவோர், பதினாறு பேறுகளும் பெறுவர்.

குருவாரத்தில் (வியாழக்கிழமை) நெய் விளக்கு ஏற்றி விரதமிருந்து வழிபாடுவோர் குருதோஷம் நீங்கப்பட்டு நல்ல ஞானத்தினையும் கல்வியறிவினையும் பெற்று ஐஸ்வர்யத்துடன் நீண்ட நாள் நல்வாழ்வு வாழ்வர்.

மேலும் கல்யாணவரம், குழந்தைவரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக் காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  ஆறுமுகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். தவிர தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், தயிர் , நெய், பழரசம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். முடி காணிக்கை, காவடி எடுத்தல் மற்றும் ஆடு, கோழி காணிக்கை தருதல் ஆகியவற்றையும் பக்தர்கள் இத்தலத்தில் தங்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். விளைச்சல் தானியங்களையும் காணிக்கை செலுத்துகின்றனர். பிரம்மபுரீசுவரருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் வேட்டி சேலை சாத்துகின்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
    
 தலபெருமை:
     
  பிரார்த்தனை தலம் : இத்தலத்து முருகப்பெருமான் தென்திசை பார்த்து நடராஜர் அம்சத்துடன் இருப்பதால் அவனது சன்னதியை சபை என்றே சான்றோர் அழைப்பர். தென்திசைக் கடவுள் தட்சிணாமூர்த்தி ரூபராய் தென்திசை பார்த்து நின்றருளி ஞானக்காரனாகவும், தென்திசையாம் எமதிசையை நோக்கி காலசம்காரமூர்த்திபோல் நின்றருளி ஆயுள் ஆரோக்கியகாரனாகவும் முருகப்பெருமான் காட்சியளிப்பதால் அறிவு, ஞானம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய அரும்பேறுகளை அடியார்க்கு அளிப்பவர் ஆகிறார். இப்பேறுகளுக்காகப் பிரார்த்தித்து பலன் கண்டோர் பலராவர். அறிவு, ஞானம், ஆயுள், ஆரோக்கியம், கண்பார்வை இவற்றுக்கு இது சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம்.

சண்முகார்ச்சனை : கண்பார்வை குறைந்தவர்கள் பிரதி தமிழ் மாதம் விசாக நட்சத்திர நாளில் தொடர்ந்து 12 மாதங்கள் முருகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனை செய்து குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு வர கண்பார்வை முழு குணம் பெறுவது இத்தலத்தில் குறிப்பிடத்தக்க அற்புதம் ஆகும்.

சிற்பக்கலை (மூலவர்) : மூலவர் ஆறுமுகன் தனியாக மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர் இருபுறத்திலும் வள்ளி தேவயானை தனியாக காட்சி அளிக்கின்றனர்.

ஆறுமுகங்கள் : முன்புறம் மூன்று பின்புறம் மூன்று முகங்கள் பன்னிருகரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தரித்திருக்கிறார். கரங்களில் விரல்கள் கூட தனித்தனியாய் இடைவெளியுடன் இருப்பது மெய்மறக்க வைக்கிறது. அது மட்டுமல்ல, அத்தனை சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் முழு எடையையும் அவரை தாங்கி நிற்கும் மயிலின் இரண்டு கால்கள் தான் தாங்கியிருக்கிறது. அத்தனை சிறப்புக்கும் அற்புதத்திற்கும் அருமையான கதை உண்டு.

அதிசய சிற்பத்தின் கதை: முத்தரச சோழன் சிக்கலில் ஆறுமுகன் சிலை வடித்த சிற்பியின் வலக்கை கட்டைவிரலை தானமாக பெற மீண்டும் கட்டைவிரலை இழுந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு அழகிய ஆறுமுகனை வடிவமைக்கக் கண்டு மனம் பொறுக்காத முத்தரச சோழன் சிற்பியின் இரு கண்களையும் பறிக்க, வலக்கை கட்டை விரலும், இரு கண்களும் இன்றி சிற்பி ஒரு சிறுமியின் உதவியுடன் வன்னிமரங்கள் அடர்ந்த வனமாகிய சமீவனம் என்ற இடத்தில் இருந்த கருங்கல்லில் ஆறுமுகன் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் வடிவமைத்து ஆறுமுகனுக்கு கண்திறக்கும் தருணத்தில் அருகில் உதவி செய்த சிறுமியின் கையில் உளி பட்டு ரத்தம் பீரிட்டு சிற்பியின் கண்களில் பட்டு சிற்பியின் கண்கள் பார்வை பெற்றது. சமீவனம் என்ற இடமே இக்காலத்தில் எண்கண் என்ற இந்த தலம் என்பது சிறப்பு.

தன் சிருஷ்டி தொழிலை முருகனிடமிருந்து மீண்டும் பெற பிரம்மா சிவனை நோக்கி எட்டுக் கண்களால் பூஜித்த ஊர் இது. எட்டுக் கண்கள் - எண்கண். தந்தையின் ஆலோசனையை முருகனும் ஒப்புக் கொண்டு பிரம்மாவிற்கு உபதேசம் செய்த ஊர் இது. இத்தலத்தின் சிறப்பை அருணகிரி நாதர் திருப்புகழில் வெகுவாகப் புகழ்ந்து பாடியுள்ளது சிறப்பானது.
 
     
  தல வரலாறு:
     
  பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப் பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை முருகன் சிறையிலடைத்தார். பிரம்மாவின் சிருஷ்டி தொழிலையும் தானே ஏற்றார். சிறை விடுத்தும் பிரம்மாவிடம் சிருஷ்டி தொழிலை தராது தானே செய்தார். இதனால் பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை தனது எட்டுக் கண்களால் பூஜித்தார். சிவபெருமான் பிரம்மாவின் முன் தோன்றினார். நடந்தவைகளைக் கூறி தனது படைத்தல் தொழிலை திரும்பப் பெற்றுத் தர பிரம்மா வேண்டுகிறார். சிவபெருமான் முருகனை அழைத்து படைப்புத்தொழிலை பிரம்மாவிடம் தருமாறு கூறகிறார். பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாத பிரம்மன் படைத்தல் தொழிலை செய்வது முறையல்ல என்று கூறி முருகன் தர மறுக்கிறார். சிவபெருமான் முருகனை சமாதானப்படுத்தி தனக்கு முன்பு பிரணவ மந்திர உபதேசம் செய்தது போல் பிரம்மாவிற்கும் உபதேசம் செய்து பின்பு படைப்பு தொழிலை தரும்படி பணிக்கிறார். முருகனும் இத்தலத்தில் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்து தென்முக கடவுளாய் அமர்ந்து உபதேசித்து சிருஷ்டித் தொழிலை திரும்பவும் பிரம்மாவிடம் தந்தார். பிரம்மா எட்டுக் கண்களால் (எண்கண்) பூஜித்தமையால் இத்தலம் பிரம்மபுரம் என்று வழங்கப்பட்டது என தலபுராணம் கூறுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோயிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar