Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 51 · 107 / 159

நின்ற சீர் நெடுமாறன்

பாண்டிய நாடான மதுரையை ஆட்சி செய்தவர்களில் ஒருவர் நின்றசீர் நெடுமாறன். நீதி தவறாத ஆட்சியும் உயிர்களிடத்தில் அன்பும் கொண்டு திகழ்ந்தவர். வடநாட்டு அரசர்கள் படையெடுத்து வந்தபோது அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். இதனால் இவர் ‘நெல்வேலி வென்ற நெடுமாறன்’ என அழைக்கப்பட்டார். இவருக்கும் சோழ வம்சத்தைச் சேர்ந்த மங்கையர்க்கரசியாருக்கும் திருமணம் நடந்தது. இந்த அம்மையாரோ மிகுந்த சிவபக்தி கொண்டவர். அதைப்போல் அமைச்சரான குலச்சிறையாரும் சிவனின்மீது உயிரையே வைத்திருந்தார். இங்கேதான் விதி தன் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது. ஆம். அப்போது மதுரை என்பது சமணர்களின் கோட்டையாக இருந்தது. இவர்கள் கூறும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அரசர் நெடுமாறன் சமண சமயத்திற்கு மாறினார். அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற பழமொழிக்கேற்ப ஏற்ப மக்களும் சமணத்தை ஏற்றனர். அதனால் பாண்டிய நாட்டில் சைவம் அழிந்து சமணம் பெரிய சமயமாக உருவெடுத்தது. இதனால் மங்கையர்க்கரசி, அமைச்சர் குலச்சிறையார் மனம் கலங்கினார். என்னதான் சைவம் தழைக்க அவர்கள் முயற்சி செய்தாலும் அது பலிக்கவில்லை. அப்போதுதான் அவர்களுக்கு அம்பிகையிடம் ஞானப்பால் உண்ட ஞானக்குழந்தையான திருஞானசம்பந்தரின் சம்பந்தம் கிடைக்க திருவருள் வழிவிட்டது. ஆம். சோழநாட்டில் காவிரி கரையோரத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு சென்று பதிகம் பாடும் ஞானசம்பந்தர் திருமறைக்காட்டுக்கு வந்திருப்பதை அறிந்தனர். உடனே அவரிடம் விஷயத்தை சொல்லி மதுரைக்கு வரவழைத்தார் மங்கையர்க்கரசி அம்மையார். இதையறிந்த சமணர்கள் ஞானசம்பந்தருக்கு பல்வேறு துன்பங்களை கொடுத்தனர். இதையெல்லாம் சிவபெருமானின் அருளால் எளிதில் முறியடித்தார். இந்தநேரத்தில் அரசர் நெடுமாறனுக்கு வெப்பு நோய் தாக்கியது. சமண குருமார்களால் இதை குணப்படுத்த முடியவேயில்லை. இறுதியில் மதுரை ஆலவாய் அண்ணலை (சொக்கநாதர்) எண்ணி திருநீற்றுப்பதிகம் பாடினார் ஞானசம்பந்தர். பின் அந்த திருநீற்றை பூசச்செய்து நோயை குணப்படுத்தினார். மகிழ்ந்த அரசர் மீண்டும் சைவத்திற்கு திரும்பினார். பாண்டிய நாடும் சைவநெறிக்கு மாறியது. இதனால் கோயில்களில் ஆகம முறைகளும் பூஜைகளும் முன்போல் நடைபெற ஆரம்பித்தன. சிவபெருமானின் திருவருளினால் அரசாட்சியும், அடியார்களுக்கு தொண்டு செய்தும் இறுதியில் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் சிவபதம் அடைந்தார் நெடுமாறன். மதுரையில் கோயில் திருப்பணிகளை இடைவிடாமல் நடைபெறச் செய்த நின்றசீர் நெடுமாற நாயனாரின் பாதம் பணிவோம். வையம் நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.

Advertisement
Top
Advertisement