இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அமிர்தவள்ளி சமேத அனலேந்தீஸ்வரர் ஸ்ரீ சுந்தரவள்ளி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் திருப்புவனத்தில் இருந்து ஏழு கி.மீ தொலைவிலும், மடப்புரத்தில் இருந்து 4கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானையும், முருகப்பெருமானும், முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமானும், ஞான குருவான தட்சிணாமூர்த்தியும் காட்சியளிக்கின்றனர். மூலவரான ஸ்ரீஅனலேந்தீஸ்வரருக்கு சிவப்பு வஸ்திரமும், ஸ்ரீஅமிர்தவள்ளி தாயாருக்கு பச்சை நிற வஸ்திரமும், ஸ்ரீசுந்தரவள்ளி தாயாருக்கு நீலவஸ்திரமும், சாத்தப்படுகிறது.பிரகாரத்தில் நந்தி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள், லிங்கோத்பவர் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
இங்கு வேதவள்ளி தாயார் ஞான சக்தியாக இருப்பதால் குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து பூஜை செய்பவர்களுக்கு அறிவான ஞான குழந்தை பிறக்கும். மூலவர் அனலேந்தீஸ்வரரை வழிபட்டால் அக்னி சம்பந்தமான கொப்புளங்கள், வெடிப்புகள் உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.
நேர்த்திக்கடன்:
பிரிந்து வாழும் கணவன்-மனைவியரில் யாராவது ஒருவர் வந்து பூஜை செய்தாலும் மீண்டும் ஒன்று கூடுவார்கள், அதுபோல இழந்த சொத்தை மீட்க சிறப்பு பூஜை செய்தால் உடனடியாக பலன் கிட்டும் என்கின்றனர். வியாழன்தோறும் தட்சிணாமூர்த்திக்கு வில்வம், கொண்ட கடலை மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வந்தால் தீராத பல்வேறு பிரச்சனைகள் தீரும்.
தலபெருமை:
இங்கு அகத்தியர் வழிபட்ட ஸ்தலம் என்றும் இன்றளவும் அகத்தியர் அரூபமாக வந்து வழிபடுகிறார் என்றும் நம்பப்படுகிறது.
தல வரலாறு:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கணக்கன்குடி கிராமம். தென்தமிழகத்தின் திருவண்ணாமலை என போற்றப்படும் அனலேந்தீஸ்வரர் கோயில் இங்கு அமைந்துள்ளது. பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, வாயு, நெருப்பு ஆகியவற்றின் வடிவாக சிவன் இருப்பதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் நெருப்பின் வடிவாக உள்ளார், அங்கு எவ்வளவு மழை பெய்து குளிர்ச்சி நிலவினாலும் அருணாச்சலேஸ்வரர் கர்ப்பகிரகத்தினுள் வெப்பம் நிலவும். அது போல கணக்கன்குடி அனலேந்தீஸ்வரர் கோயிலிலும் நெருப்பு வடிவாக சிவன் உள்ளார். அனல் என்றால் நெருப்பு அனலேந்தீஸ்வரர் என பெயர் வந்தது. இத்திருக்கோயிலில் மூலவராக அனலேந்தீஸ்வரரும் இச்சா சக்தியாக ஸ்ரீஅமிர்தவள்ளி தாயரும், கிரியா சக்தியாக சுந்தரவள்ளி தாயாரும், ஞான சக்தியாக வேதவள்ளி தாயாரும் காட்சியளிக்கின்றனர். 300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில் இது. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளும் இணைந்த சிறப்பம்சமாகும். நமச்சிவாய என்ற எழுத்தில் நடு எழுத்தான சி நெருப்பு என்பதால் இது நெருப்பு ஸ்தலம் என அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஆண்டு தோறும் பங்குனி மாதம் 27, 28 தேதிகளில் மூலவர் அனலேந்தீஸ்வரர் மீது சூரிய ஒளி படர்வது சிறப்பு.
இருப்பிடம் : மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் 20 கி.மீ. துõரத்தில் உள்ள மடப்புரம் பஸ் ஸ்டாப்பிலிருந்து 5 கி.மீ துõரத்தில் கணக்கன்குடி அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.