பதிவு செய்த நாள்
17
ஏப்
2012
10:04
பெங்களூரு: சாய்பாபாவின் அறிவுரைப்படி, இளைஞர்கள் வாழ்க்கை முறையை அமைத்து கொண்டால், எல்லாவற்றிலும் ஜெயம் கிடைக்கும், என்று சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி சிவராஜ்பாட்டீல் பேசினார். சாய்பாபா முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கலாசாரம், ஆன்மிகம் பற்றிய கோடை கால இலவச வகுப்புகள், பெங்களூரு ஒயிட் பீல்டு சத்ய சாய் பிருந்தாவன் ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட்டில் நேற்று துவங்கியது. சிவராஜ் பாட்டீல் குத்து விளக்கேற்றி பேசியதாவது:இளைஞர்களுக்கு வழிகாட்டுவது இன்றைய முக்கிய கடமை. காலையில் எழுந்தவுடன், அன்றைய தினம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை வரை முறைபடுத்தி கொண்டு அதன் படி நடக்க வேண்டும். அன்றைய இரவில், காலையிலிருந்து இரவு வரை, திட்டமிட்டபடி செய்தோமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் இவ்வாறு செய்தால் நாடு முன்னேறும். இந்துஸ்தான் என்று குறிப்பிடுவதை விட, "யங்கிஸ்தான் (இளைஞர் நாடு) என்று குறிப்பிடலாம். ஆரோக்கியமான உடல் நலத்தை பேணுவதாக எண்ணி, செயற்கை முறையில் பலரும் தங்கள் உடலை கெடுத்து கொள்கின்றனர். நிதானம், நல்லொழுக்கத்தை கடைபிடித்தால், வன்முறை, ஊழல்களை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீ சத்ய சாய் ஆர்கனைசேஷன் அகில இந்திய தலைவர் சீனிவாசன் பேசியதாவது: அனைவருக்கும் வழிகாட்டும் வகையில் இந்திய கலாசாரம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு இனம், மொழிகள் இந்தியாவில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பிருந்தாவன் கேம்பஸ் இயக்குனர் சஞ்சய் சகானி வரவேற்றார். சத்ய சாய் அமைப்பு கர்நாடக தலைவர் தாக்கப்பா, டிரஸட் கன்வீனர் கங்காதர ஷெட்டி, இளைஞர் நல அமைப்பாளர் வினய் குமார் கலந்து கொண்டனர்.இலவச வகுப்பில் பல மாநிலங்களை சேர்ந்த, 1,000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இட வசதி, உணவு வசதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 20ம் தேதி வரை இந்த வகுப்புகள் நடக்கிறது.