பதிவு செய்த நாள்
19
நவ
2019
02:11
ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், உலக நன்மை வேண்டி, கார்த்திகை சோமவார வழிபாடு நேற்று (நவம்., 18ல்), நடந்தது. சாபம் பெற்ற சந்திரன், சிவனுக்கு ருத்ர யாகம் செய்து விமோசனம் பெற்றார்.
இதனால் சந்திரனை, தன் தலை மீது ஈசன் சூடிக்கொண்டர். கிருதாயுகத்தில் நடந்த நிகழ்வு, கார்த்திகை சோமவாரத்தில் நடந்ததாக ஐதீகம். இதனால் தொன்று தொட்டு கார்த்திகை சோமவார நாட்களில், சிவாலயங்களில் சங்கு பூஜை, சகஸ்ரநாம ஹோமம், ருத்ரயாகம் நடத்தப்படுகிறது.
ஈரோடு கோட்டை, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு நேற்று (நவம்., 18ல்), நடந்தது. இதேபோல் மகிமாலீஸ்வரர் கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. உலக நன்மை, குடும்ப ஒற்றுமை உள்ளிட்ட வேண்டுதல் வைக்கப்பட்டு நடந்த வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கைலாசநாதர் கோவிலில்...: கார்த்திகை மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில், கார்த்திகை சோமவாரம் முக்கியமானது. இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில், இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று, ஸ்கந்த புராணம் கூறுகிறது. அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாத முதல் திங்கள்கிழமையான நேற்று (நவம்., 18ல்), பக்தர்கள் பலர் சோமவார விரதம் தொடங்கினர். இதையொட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 108 சங்கு பூஜை, கலச வேள்வி, யாகசாலை பூஜை நடந்தது.