பதிவு செய்த நாள்
19
நவ
2019
02:11
திருவண்ணாமலை: தீப திருவிழா ’போலி பாஸ்’ தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும் டிச.,1ல், கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிச.,10 அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலைஉச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதில், கோவில் கொடி மரத்தின் அருகே, பஞ்ச மூர்த்திகள் தரிசனம் மற்றும் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தரிசனதுடன் கூடிய மகா தீபத்தை காண, லட்சக் கணக்கானோர் போட்டி போடுவர்.
ஆனால், கோவில் வளாகத்திற்குள், 6,000 பேர் மட்டும் தரிசனம் காணும் வகையில் இடம் உள்ளது. இதில், முக்கிய பிரமுகர் என, கோவில் நிர்வாகம் வழங்கி வந்த, வி.ஐ.பி., பாஸ், நீதிமன்ற உத்தரவு படி, கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1,100 பாஸ்கள் மட்டும், 500 ரூபாய், 600 ரூபாய் என, இரு கட்டண விகிதத்தில், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பாஸ், உபயதாரர்கள், தீப திருவிழா பணியாளர்கள், சுவாமி தூக்குபவர்கள், காவல் பணி என, பல்வேறு பெயர்களில் பாஸ்கள், கோவில் நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு, உள்ளே செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் பாஸ்கள், போலியாக தயாரிக்கப்பட்டு, ஒரு பாஸ், 2,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து, பணம் பார்க்கும் கும்பல் ஆண்டுதோறும் இயங்கி வருகிறது. இதனால், சாதாரண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடிவதில்லை. எனவே, இதை தடுத்து, சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டு மென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.