பதிவு செய்த நாள்
18
ஏப்
2012
11:04
உடன்குடி: உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரை திருவிழா வரும் 29ம் தேதி கஞ்சி பூஜையுடன் துவங்குகிறது. வரும் மே 5ம் தேதி அன்னமுத்திரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.உடன்குடி அருகே செட்டியாபுரத்தில் அமைந்துள்ளது ஐந்து வீட்டு சுவாமி கோயில். இங்கு பெரியசுவாமி, வயணப்பெருமாள், அனந்தம்மாள், ஆத்திசுவாமி, திருப்புளி ஆழ்வார், பெரியபிராட்டி அம்மன் ஆகிய சுவாமிகள் ஐந்து சன்னதிகளில் எழுந்தருளி ஐந்து வீட்டு சுவாமிகளாக அருள் பாலிக்கின்றனர். ஆலயத்தில் சித்திரை பூஜை திருவிழா வரும் 29ம் தேதி இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜையுடன் துவங்குகிறது.
வரும் 30ம் தேதி பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1.30 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 10 மணிக்கு மேக்கட்டி கட்டுதல் நிகழ்ச்சியும், அதிகாலை 3 மணிக்கு மேக்கட்டி பூஜையும் நடக்கிறது. வரும் மே 1ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும், இரவு 9 மணிக்கு திரைப்பட கச்சேரியும், மே 2ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு திருக்குறள் வினாடி-வினா நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு கச்சேரியும், மே 3ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும், இரவு 8 மணிக்கு வழக்காடுமன்றம், இரவு 10 மணிக்கு திரைப்பட கச்சேரியும், மே 4ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை முழு நேர சிறப்பு பூஜையும், மாலை 6.30 மணிக்கு சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு பரிசுமழை பொழிகின்ற நிகழ்ச்சியும், இரவு 10.30 மணிக்கு திரைப்பட கச்சேரியும், நகைச்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் மே 5ம் தேதி பகல் 11 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜையும், மாலை 4மணிக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த அன்னமுத்திரி பிரசாதத்தை காயவைத்து அலுவலகம் மற்றும் வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் இருப்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கிச் செல்வர். இத்திருவிழாவை காண சென்னை, மதுரை, கோவை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தருவர். வரும் மே 6ம் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன் செய்து வருகிறார்.