பதிவு செய்த நாள்
02
டிச
2019
05:12
திருச்சி: திருச்சி, திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்து ஓராண்டு நிறைவையொட்டி, வருஷாபிஷேக பூஜைகள் நடந்தது.
பஞ்ச பூத தலங்களில் நீர்த் தலமாக விளங்கும் திருச்சி, திருவானைக்காவல், ஜம்பு முனிவரின் வயிற்றில் இருந்து தோன்றிய வெண்நாவல் மரத்தால் உருவான இடம் என்பதால், ஜம்புகேஸ்வரம் என்றழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளிய இறைவனும் அந்த பெயராலேயே ஜம்புகேஸ்வரர் என்றழைக்கப்பட்டார். யானையும், சிலந்தியும் போட்டி போட்டுக் கொண்டு இறைவன் மீதான பக்தியை வெளிப்படுத்திய தலமாதலால், ஆனைக்கா என்றழைக்கப்பட்டு, காலப்பபோக்கில் திருவானைக்காவல் என்றானது. ஜம்புகேஸ்வரரும், அகிலாண்டேஸ்வரியும் எழுந்தருளிய இத்திருத் தலத்தில், கடந்த 2000ம் ஆண்டு திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பின், 5 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2018 ம் ஆண்டு, டிசம்பர் 9 மற்றும் 12ம் தேதிகளில் காஞ்சி சங்கராச்சார்யா சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், இரண்டு கட்டமாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
மகா கும்பாபிஷேகம் செய்து, ஒரு ஆண்டு நிறைவடைந்ததால், வருஷாபிஷேகம் செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி, புண்யாகவாசனம், கலச பூஜை, ஸ்ரீருத்ர ஹோமம், சோடச தீபாராதனை, கோபூஜை, கஜபூஜை போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 11 மணிக்கு, கடம் புறப்பாடும் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. வருஷாபிஷேக நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் அனைத்து அர்ச்சகர்கள், தேவஸ்தான பணியாளர்கள் பங்கேற்றனர்.