பதிவு செய்த நாள்
03
டிச
2019
02:12
வீரபாண்டி: உலக நன்மைக்காக, சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், கார்த்திகை மூன்றாவது சோமவாரமான நேற்று (டிசம்., 2ல்), 1,008 சங்காபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதத்து திங்கள் கிழமைகளில் அவரவர் வசதிப்படி, 108 அல்லது 1,008 சங்காபிஷேகம் நடத்துவர். சேலம், உத்தமசோழபுரம் பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவி லில், மூன்றாவது சோமவாரமான நேற்று கரபுரநாதருக்கு, 1,008 சங்காபிஷேகம், பெரியநாயகி அம்பாளுக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது.
இதற்காக தனித்தனியாக சிவலிங்க வடிவிலும், ஸ்ரீ சக்ர வடிவிலும் சங்குகள் அலங்கரித்து வைத்திருந்தனர். உலக நன்மைக்காக நடக்கும் சங்காபிஷேகத்தையொட்டி ரூத்ர ஜபம், யாகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. யாகபூஜைகள் பூர்ணாஹூதியுடன் நிறை வடைந்து, சங்குகளில் நிரப்பியிருந்த புனிதநீரை மூலவர் கரபுரநாதருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மூலவர் கரபுரநாதருக்கு வெள்ளி நாகாபரணம், பெரியநாயகிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை சிவாச்சாரியார்கள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.