திருச்சி குட்டிக்குடி திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2026 04:03
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
திருச்சி புத்தூரில் புகழ்பெற்ற அருள்மிகு குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குட்டிக்குடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ரத்தத்தை மருளாளி குடித்து, பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார். இந்த ஆண்டு குட்டிக்குடி திருவிழா கடந்த 09ம்தேதி காப்புகட்டி, காளியாட்டத்துடன் வெகுவிமரிசையாக விழா தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருவிழாவில் கோவிலுக்கு பக்தர்களால் வேண்டுதலுக்காகவும், கொடையாகவும் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆடுகள் மந்தைக்கு அழைத்துவரப்பட்டு பின்னர் அம்மன் அருள்பெற்ற மருளாளி சிவக்குமார் ஆக்ரோஷமாக ஆட்டின் கழுத்துப்பகுதிகளை கடித்து ரத்தத்தைக் குடித்த பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். முன்னதாக குழுமாயி அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு, பிறகு அரசு சார்பிலும், காவல்துறைசார்பிலும் வழங்கப்பட்ட ஆடுகளை மருளாளி குட்டிகுடித்தார். இதில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.