பதிவு செய்த நாள்
21
ஏப்
2012
10:04
மோகனூர்: மோகனூர் அருகே, 16 அடி உயரத்தில் ஐந்து தலையுடன் அமைந்துள்ள ராஜநாகலட்சுமி ஸ்வாமிக்கு ஜலாதிவாசம் கோலாகலமாக நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். மோகனூர் யூனியன், ராசிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி கோவில் உள்ளது. ராகு, கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில், 16 அடி உயரத்தில், ஐந்து தலையுடன் கூடிய ராஜநாகலட்சுமி ஸ்வாமி சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பக்தர்கள் வழங்கிய நன்கொடையை கொண்டு சுசீந்திரம் பகுதியில் இருந்து கருங்கல் வெட்டி எடுத்துவரப்பட்டது. எட்டு மாதங்களுக்கு முன் சிலை வடிவமைக்கும் பணி துவங்கியது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். முன்னதாக, 16 அடி உயரத்தில் ஐந்து தலையுடன் கூடிய ராஜநாகலட்சுமி ஸ்வாமிக்கு ஜலாதி, தான்யாதி, சந்தனாதி வாச பிரவேசம் மற்றும் பிரதிஷ்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள், காலை 8 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். மதியம் 1.30 மணியளவில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, கோவில் அருகே அமைக்கப்பட்ட மெகா தொட்டியில் ஸ்வாமியை இறக்கி ஜலாதிவாசம் செய்யப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். தொடர்ந்து, 41 நாட்கள் ஜலாதிவாசம் செய்யும் ஸ்வாமிக்கு, மே 31ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள், தான்யாதிவாசம் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து, எட்டு நாட்களுக்கு பின், ஜூன் 8ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சந்தனாதி வாசம் செய்யப்படுகிறது. ஜூன் 25ம் தேதி பகல் 12 மணிக்கு 16 அடி ஐந்து தலை ராஜநாகலட்சுமி ஸ்வாமி நிலை நிறுத்தலும், அஷ்டபந்தன பிரதிஷ்டையும் நடக்கிறது. ஜூலை 2ம் தேதி காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.