பதிவு செய்த நாள்
21
ஏப்
2012
10:04
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 12ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 7 மணிக்கு தங்க தோளுக்கினியானில் வீதி புறப்பாடும் மண்டபத்தில் திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தினமும் சிம்ஹவாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. 5ம் திருவிழாவையொட்டி காலை சுவாமி நம்மாழ்வார் மங்களாசாஸனமும், மாலையில் நம்மாழ்வாருக்கு ஸ்ரீகள்ளபிரான், ஸ்ரீ விஜயாசனார், ஸ்ரீகாய்சின வேந்தபெருமாள், ஸ்ரீ பொலிந்துநின்ற பிரான் ஆகியோர் குடவரை பெருவாயில் எதிர்சேவை நடந்தது. பின்னர் பஜாரில் திவ்ய தீப தரிசனம் காட்சி நடந்தது. 8ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி கள்ளபிரான் குதிரை வாகனத்தில் தேர் கடாட்சம் நடந்தது. நேற்று 9ம் திருவிழாவை முன்னிட்டு காலை 6.15 மணிக்கு தங்கதோளுக்கினியானில் சுவாமி கள்ளபிரான் தங்க குடை பிடித்து தேர்நிலையம் வந்தார். பின்னர் தீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து தேரில் எழுந்தருளினார். அலங்காரம் நடந்தது. பின்னர் தேரில் தீபாராதனை நடந்தது. காலை 9.10 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கொளுத்தும் வெயிலில் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு தனியார், தொண்டு, அரசியல் கட்சிகள் சார்பில் நீர்மோர், பானகாரம், வழங்கப்பட்டது. தேர் மாலை 5.10 மணிக்கு தேர்நிலையம் வந்தடைந்தது. விழாவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், ஸ்தலத்தார்கள், ஸ்ரீனிவாசன், வெங்கிடாச்சாரி, ஸ்ரீனிவாசன், டவுண் பஞ்.,தலைவர் அருணாசலம், யூனியன் ஆணையாளர் வேலுமயில், தாசில்தார் நயினார்பிள்ளை, துணைத் தாசில்தார் முத்துராமலிங்கம், ஆழ்வை டவுண் பஞ்.,தலைவர் ஆதிநாதன், ஸ்ரீவை துணைத் தலைவர் மாரிமுத்து, எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை தலைவர் முத்தையா, ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் சிவராமலிங்கம், ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர்கள், வக்கீல் ராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.