ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா டிச. 26, 27 ஆகிய இருநாட்கள் நடக்கிறது. நேற்று (டிச.18) அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை, மாலையில் பூத பலியும் நடைபெறும். டிச.19 முதல் 25 வரை அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், டிச.26 மாலை பள்ளி வேட்டை புறப்பாடும், இரவு 9:00 மணிக்கு பள்ளி வேட்டையும், சயன நிகழ்ச்சியும் நடக்கிறது.
மறுநாள் டிச.27 காலை 8:00 மணிக்கு கோயிலில் இருந்து ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டு, ரெகுநாதபுரம் வீதிகளின் வழியாக ஆடிப்பாடி, வேடமிட்டு பேட்டை துள்ளலும், கோயில் அருகே உள்ள பஸ்மக்குளத்தில் உற்ஸவர் ஐயப்பனுக்கு ஆராட்டு விழாவும் சபரிமலை சன்னிதானத்தில் நடப்பதை போன்று செய்யப்படுகிறது. அன்று காலை 10:00 மணிக்கு சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு, மகா அபிஷேக ஆராதனைகளுக்கு பின் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சுவாமி, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.