திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா நேற்று நிறைவடைந்தது.
கோயிலில் டிச., 14ல் காப்பு கட்டுடன் துவங்கிய இத்திருவிழாவில் தெய்வானை மட்டும் புறப்பாடாகி திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப்பட்டு, அம்மனின் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசிமூலம் பல் துலக்குதல், மைஇட்டு கண்ணாடி பார்க்கும் நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்பட்டது.நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று பூஜை முடிந்து அம்மன் பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருவிழா காலங்களில் சுவாமி, தெய்வானை அம்மனுடன் எழுந்தருளுவது வழக்கம். ஐப்பசி பூரம், எண்ணெய் காப்பு திருவிழாக்களில் மட்டுமே தெய்வானை அம்மன் புறப்பாடு நடக்கும்.