பதிவு செய்த நாள்
21
டிச
2019
11:12
கோவை பெரியகடைவீதி, டி.கே.மார்க்கெட் கே.கே.பிளாக்கில் உள்ள, ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு திருப்பாவையின், ஆறாவது பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
கோவிலின் சிறப்பு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள், ஐந்து மாலை, பூஜைக்கான மங்கலப்பொருட்களோடு சென்று, புதன்கிழமையன்று ஸ்ரீ கல்யாணவெங்கட்ரமணசுவாமியை மனதார வேண்டி, வழிபாடு செய்ய வேண்டும்.பின், கோவில் அர்ச்சகர் கொடுக்கும் சுவாமி மாலைகளை, வீட்டின் பூஜை அறையில் வைத்தால், அடுத்த ஓராண்டில் திருமணம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை. இந்நடைமுறையை பின்பற்றி திருமணமான பலர், குழந்தை செல்வங்களுடன் தற்போதும் கோவிலுக்கு வருகை தருகின்றனர். மார்கழி மாதத்தை ஒட்டி இக்கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, திருப்பாவையின், புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோவிலில் என்று துவங்கும் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.
பாடலின் பொருள் பெண்ணே... பறவைகள் கூவத் துவங்கி விட்டன. பெரிய திருவடியாகிய கருடனை வாகனமாக கொண்ட எம்பெருமான் சன்னதியில், ஊதும் சங்கின் ஒலியும் கேட்கிறது. பேய் மகளான பூதனை தன் மார்பில் நஞ்சு தடவிய பால் கொடுத்து, கொல்ல எண்ணிய போது, நஞ்சோடு அவள் உயிரையும் சேர்த்துக்கொன்றவன் கண்ணன். தன்னைக்கொல்ல வந்த சகடாசுரனையும் தன் காலால் இடறிக்கொன்றவன். அத்தகைய எம்பெருமான் திருப்பாற்கடலில் யோக நித்திரை கொண்டுள்ளான். அவனை முனிவர்களும் யோகிகளும் தம் உள்ளத்தில் வேண்டியவாறு, அதிகாலையில் மெள்ள எழுந்து, ஹரி! ஹரி! என்று அழைக்கும் குரலும் கேட்கிறது. அது உன் உள்ளத்தையும் மகிழ்விக்கும் எழுந்திரு என்கிறாள் தோழி ஒருத்தி என்பதே, இப்பாடலின் பொருள்.