மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நீர் தேக்க மற்றொரு தடுப்பணை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2019 02:12
மதுரை : மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை நிரப்ப குருவிக்காரன் சாலை பாலம் அருகே வைகை ஆற்றில் ரூ.12 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை அமைத்து தண்ணீர் திருப்பி விட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொதுப்பணித்துறை வழிகாட்டுதல்படி தற்போது ஏ.வி.பாலம் தடுப்பணையில் இருந்து பனையூர் கால்வாய்க்கு இணைப்பு கால்வாய் ரூ.92 லட்சம் மதிப்பில் அமைத்து மாநகராட்சி தண்ணீர் அனுப்பி வருகிறது. தவிர மீனாட்சி கோயில் சார்பில் வைகை ஆற்று கிணற்றில் இருந்து தலா 10 எச்.பி., திறன் கொண்ட இரண்டு மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுத்து தெப்பத்தில் விடப்படுகிறது.
குருவிக்காரன் பாலம் அருகே இருந்த தடுப்பணை 1945ல் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதே இடத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தடுப்பணை அமைத்து சொட்டத்தட்டி கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல கோயில் நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.
இதற்கான நிதியை பொதுப்பணித்துறைக்கு வழங்கவும் தயாராக உள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் ஆண்டு முழுவதும் தெப்பம் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கும்.