பதிவு செய்த நாள்
23
டிச
2019
02:12
அவிநாசி:’ராமாயணம் சொல்லும் வாழ்க்கை எப்படிப்பட்டது?’ என்பது குறித்து, கம்பராமாயண சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் விளக்கினார்.அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில், மார்கழி உற்சவம் நடந்து வருகிறது.
தினமும், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.நேற்று முன்தினம் இரவு அவர் பேசியதா வது:ஒருவர் நம்மை தொடர்ந்து கொண்டாடுகிறார் என்றால், நம்மால் ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக தான் இருக்கும்; தற்போதைய சூழலில், சுயநலம் அதிகரித்து விட்டது.
சுயநலம் என்ற புள்ளியில் தான், வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது. எந்தவொரு எதிர் பார்ப்பும் இல்லாமல், பிறரை கொண்டாடுவது தான், மனித மாண்பு.பதவி, அந்தஸ்து எதுவாக இருப்பினும், இல்லற வாழ்க்கையில், அதே அதிகாரத்தை காண்பிக்க முடியாது. பொறுப்பு வரும் போது, தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். குடிபழக்கம் உட்பட தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த குடும்பமே பாதிக்கும். சுயநலம் களைந்து, பொதுநலத்துடன் வாழ வேண்டும். இறைவன் குடியிருக்கும் உயர்ந்த இடமான உள்ளத்தில், கவலைக்கு இடம் தரக்கூடாது. வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி, மாறி வரும்போது தான், மனது பக்குவப்படும்.
பெண்களுக்கு, கல்வி, பணம், புகழ், அந்தஸ்து அவசியம்; அதே நேரம் அது, அவர்களின் திருமண பந்தத்தை முறித்து விடுகிறது. பெண்கள், அடக்கம், ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். அப்போது, அவர்களது கல்வி, புகழ், அவர்களின் இல்லற வாழ்க்கையை இனிமையானதாக மாற்றும்.வாழ்க்கை தத்துவம் உணர்ந்து வாழ வேண்டும். ஜாதி, மதத்துக்கும் ஒழுக்கம், பண்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில், நம்மை போற்றும் வகையில் வாழ வேண்டும். மூத்தோர் சொல் கேட்டு நடக்க வேண்டும்; மூத்தோரும், இளை யோரின் ஆலோசனைகளை கேட்க வேண்டும். இந்த வாழ்க்கை தத்துவங்களை, ராமாயண கதை தெளிவாக உணர்த்துகிறது. எனவே, ராமாயணம் படிக்க வேண்டும்; அதை புரிந்து படிக்க தமிழ் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.