பதிவு செய்த நாள்
25
டிச
2019
10:12
கங்கண சூரிய கிரகணம் நாளை நிகழ உள்ளது. ஐந்து நிலைகளை உடைய, இந்த கிரகணத்தை காண, உலகில் உள்ள வானியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், தமிழகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.பூமிக்கும் சூரியனுக்கும் இடையே, சந்திரன் நேர்கோட்டில் வரும் போது, அதன் நிழல், பூமியின் மீது விழும். இந்த நிகழ்வு, சூரிய கிரகணம் எனப்படுகிறது.சூரியனின் மையப்பகுதி மட்டும் மறைக்கப்பட்டு, அதன் விளிம்பு பிரகாசிக்கும் வகையிலான, கங்கண சூரிய கிரகணம், நாளை நிகழ்கிறது.
நாளை காலை, 8:06 முதல், 11:19 மணி வரை, தமிழகத்தில் பல பகுதிகளில், கங்கண சூரிய கிரகணத்தை காணலாம். சென்னையில், காலை, 8:09 மணிக்கு கிரகணம் துவங்குகிறது. இந்த சூரிய கிரகணம், ஐந்து நிலைகளை உடையது. சூரியனை நிலவு தொடும் நிலை, ஸ்பரிசம் என, அழைக்கப்படுகிறது; இது, முதல் நிலை. சூரியனுக்குள் முழுமையாக சந்திரன் செல்வது, இரண்டாவது நிலை; சூரியனின் விளம்பு பிரகாசிப்பது, மூன்றாம் நிலை. சூரியனை விட்டு, சந்திரன் விலக தொடங்குவது, நான்காம் நிலை; சூரியனை சந்திரன் முழுவதும் விலகுவது, ஐந்தாம் நிலை. கங்கண சூரிய கிரகணத்தை, புதுக்கோட்டையில் மட்டுமே, முழுமையாக கண்டு ரசிக்க முடியும் என, விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, உலக நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், தமிழகம் வந்துள்ளனர்.கதிர்வீச்சு பாதிப்புசூரியகிரகணம் குறித்து, வான சாஸ்திர வல்லுனர்கள் கூறியதாவது: சூரிய கிரகணம் தோன்றுவதற்கு முன்பாகவே, வீட்டில் சமைத்து வைத்த உணவு, தண்ணீர் போன்றவைகளில், தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். அப்போது தான் கிரகணத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சுகளின் தோஷங்கள் நீங்கும்.கிரகணம் முடிந்தவுடன், கடலில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
அருகில், கடல் இல்லாதவர்கள், வீட்டில் கல் உப்பை, ஒரு கை நிறைய எடுத்து வாளியில் போட்டு, தண்ணீர் ஊற்றி குளிக்கலாம்; இதனால், தோஷங்கள் நீங்கும்.கர்ப்பிணி பெண்கள், கிரகணம் துவங்கி முடியும் வரை, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கிரகண காலத்தில் நகம் கடிப்பது, வெட்டுவது தவிர்க்கப்பட வேண்டும். கிரகணத்தின் போது, உணவு அருந்துவதை தவிர்க்கவும். ஏனென்றால், கதிர் வீச்சு காரணமாக, ஜீரண கோளாறு ஏற்பட்டு, உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.பாம்பு பஞ்சாங்க இயக்குனர் கணஷே்குமார் கூறியதாவது: ஜோதிட ரீதியாக, தனுசு ராசியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது, கேதுவின் ஆதிக்கம் உடைய மூலம் நட்சத்திரத்தில் ஏற்படுவதால், அந்த நட்சத்திரக்காரர்கள், உரிய பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
மூலம் நட்சத்திரத்திற்கு முன் உள்ள கேட்டை, பின் உள்ள பூராடம், கேதுவின் ஆதிக்கம் உடைய அசுவினி மற்றும் மகம் நட்சத்திரக்காரர்கள், பரிகார சாந்தியாக, கோவிலுக்கு சென்று, அர்ச்சனை செய்து சுவாமியை தரிசிக்கலாம். கிரஹணம் பிடிக்கும் முன், அதிகாலை, 4:30 மணிக்கு சாப்பிட வேண்டும். பின், கிரஹணம் விட்ட பின், ஸ்நானம் செய்து தான் உணவு உண்ண வேண்டும். வயதானவர்கள், வியாதியஸ்தர்களுக்கு, இதில் விதி விலக்கு உண்டு. இவ்வாறு, அவர் கூறினார்.-- நமது நிருபர்-