பதிவு செய்த நாள்
26
டிச
2019
02:12
பொள்ளாச்சி: ராம பிரானின் ஆஸ்தான பக்தரான அனுமன், மார்கழி மூல நட்சத்திரம், தனுசு ராசி, அமாவாசை திதியில் அவதரித்தவர். அந்நாளில், பக்தர்கள் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடுகின்றனர்.நேற்று 25ல், பெருமாள் கோவில்களில், ஆஞ்சநேயர் சன்னதிகளில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பொள்ளாச்சி, கடைவீதி கரிவரதராஜ பெருமாள் கோவில், பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவில், ஆச்சிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், ஆஞ்சநேயருக்கு பலவகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றியும், வெற்றிலை மாலை, வடை மாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலை அணிவித்தும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் குடும்பத் துடன் திரளாக பங்கேற்று, ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
* நெகமம் அருகே, காட்டம்பட்டிபுதுாரில், 450 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.மார்கழி மாத அதிகாலை பூஜையை தொடர்ந்து, அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை நேற்று 25ம் தேதி நடந்தது. வாலில் மணி கட்டிய ஆஞ்நேயருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து அலங்கார பூஜை, வடை மாலை சாற்றுதல் மற்றும் ஆஞ்சநேயரை போற்றி பஜனை நடந்தது.
இதேபோல், நஞ்சேகவுண்டன்புதுார் வாய்க்கால் மேடு பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதியில், ஆஞ்சநேயர் பிறந்த நாளான நேற்று 25ம் தேதி அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பக்திபாடல்களை பாடினர்.இதே போல், வால்பாறை அண்ணாநகர் ராமர்கோவிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயருக்கும், சோலையார் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயருக்கும், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.