பதிவு செய்த நாள்
26
டிச
2019
02:12
திருச்சி: ”ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்பு பணிக்கு, 207 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன,” என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜ் தெரிவித்தார்.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, இன்று 26ம் தேதி துவங்கி, வரும் ஜனவரி, 5ம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், ஜனவரி, 6ம் தேதி முதல், 16ம் தேதி வரை ராப்பத்து விழாவாகவும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறப்பு, ஜனவரி, 6 அதிகாலை, 4:45 மணிக்கு நடக்கிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்வர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. நேற்று, ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
அதை திறந்த வைத்த, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜ் நிருபர்களிடம் கூறியதா வது: பொதுமக்கள் பாதுகாப்புக்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில், 117 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நான்கு உத்திர வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 24 கேமராக்கள் என, பாதுகாப்பு பணிக்காக புதிதாக, 207 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன் அருகே கண்காணிப்பு கேமராக் களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. பக்தர்களின் வசதிக்காக, 21 இடங்களில் பெரிய எல்.இ.டி., - எல்.சி.டி., ’டிவி’க்கள், 73 இடங்களில் ஒலி பெருக்கிகள் பொருத்தப் பட்டுள்ளன.
பக்தர்கள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, நெடுந்தெரு மந்தை, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி என, ஒன்பது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றிலும், 12 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.