பதிவு செய்த நாள்
26
டிச
2019
02:12
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, மாநகராட்சி மூலம், 51 இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைத்து குடிநீர் வழங்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்காக, திருச்சி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதி மற்றும் முன்னேற்பாடு பணிகளை, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், நகரப்பொறியாளர் அமுதவல்லி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஏகாதசி திருவிழாவிற்காக, 12 இடங்களில் தற்காலிக நவீன கழிப்பிடங்கள், 39 தற்காலிக சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடமாடும் கழிவறைகளும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் சுற்று வட்டாரப்பகுதிகளில், 7 பொது குடிநீர் குழாய்களிலும், வீட்டு இணைப்புகளுக் கும் திருவிழா நாட்களில், 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஸ்ரீரங்கம் சாலைரோடு, பஞ்சக்கரை யாத்ரிவாஸ் எதிரில் கன்னிமார்தோப்பு, சிங்கராயர்கோவில் எதிரில் வாகனம் நிறுத்துமிடங்களில் கழிவறை வசதிகளும், கூடுதல் மின் விளக்குகளும் அமைக்கப்படுகின்றன.
மேலும், 51 இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைத்து மாநகராட்சி மூலம், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படுகிறது. ஏகாதசி திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக, மாநகராட்சி சார்பில், அம்மா மண்டபம் மேல்நிலை நீர்தேக்கத் தோட்டி அருகில், எஸ்.என். திருமண மண்டபம் அருகில், வெள்ளை கோபுரம் அருகில் ஆகிய மூன்று இடங்களில், மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொது மக்கள் நலன் கருதியும், மாநகரை சுகாதாரமாக பராமரிக்கவும், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், பொது இடங்களில் குப்பையை போடாமல், குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் எனவும் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.