பதிவு செய்த நாள்
05
ஜன
2020
03:01
சேலம்: வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்களுக்கு வழங்க, 70 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்தது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில்களில், நாளை காலை, சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.
அப்போது, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக, லட்டு வழங்கப்படும். அதற்காக, சவுந்தரராஜ பெருமாள் கோவில் நிர்வாகம், ஆண்டாள் கோஷ்டியார், பக்தர்கள் சார்பில், 20 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. அதேபோல், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், 13ம் ஆண்டாக, ஆண்டாள் திருப்பாவை நண்பர் குழுவினர், கடலை மாவு - 300 கிலோ, சர்க்கரை - 600 கிலோ, முந்திரி - 50 கிலோ, உலர் திராட்சை - 35 கிலோ, சமையல் எண்ணெய் - 20 டின், நெய் - 50 கிலோ, ஏலக்காய் - 15 கிலோ உள்ளிட்ட பொருட்களால், 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணியை, நேற்று காலை துவங்கினர். இதில், சமையல்காரர்களுடன், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.