பதிவு செய்த நாள்
05
ஜன
2020
03:01
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், நாளை காலை, வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடக்கிறது. பக்தர்கள் அதிகம் பேர் வருவர் என்பதால், அவர்களின் பாதுகாப்புக்காக, விசேஷ ஏற்பாடு நடந்து வருகிறது.
காஞ்சிபுரம், வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, நாளை நடைபெறுகிறது. இக்கோவிலில், ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் பரமபத வாசல், நாளை அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்படுகிறது.அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசிப்பர் என்பதால், கோவில் வெளிப்புறம், உட்புறங்களில், தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.அதேபோல், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கான வசதியை அறநிலையத் துறையும், பாதுகாப்பு ஏற்பாட்டை மாவட்ட காவல் துறையும் செய்து வருகிறது.
இது குறித்து, கோவில் செயல் அலுவலர் குமரன் கூறியதாவது:பொது தரிசனம் மற்றும் வி.ஐ.பி.,க்கள் கோபுர வாசல் வழியாக செல்ல, வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கோவில் வடக்கு, தெற்கு மாட வீதியில், இரு, மொபைல் டாய்லெட் அமைக்கப்படுகிறது. கூட்டத்தை கண்காணிக்க கோவிலை சுற்றிலும், 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.கோவில் சார்பில், பாஸ் வழங்கப்பட்டவர்களுக்கு தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள், மருத்துவமனை சாலை வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவில் வளாகத்தில் மருத்துவ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அதிகாலை, 3:30 மணிக்கு, நடை திறக்கப்படும்.மார்கழி மாத வழிபாட்டைத் தொடர்ந்து, அலங்கார உற்சவர், உலகுய்யநின்ற நாயனார், தேவியருடன், மகாமண்டபத்தில் எழுந்தருளி, 5:30 மணிக்கு, சொர்க்கவாசல் கடந்து, வீதியுலா செல்கிறார். திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், மூலவருக்கு, வைகுண்ட ஏகாதசி நாளில், தைலகாப்பு அகற்றி, வழிபாடு நடக்கிறது.நாளை, மூலவர், உற்சவர் ரங்கநாதர், வழிபாட்டைத் தொடர்ந்து, 5:30 மணிக்கு, உற்சவர், தேவியருடன், சொர்க்க வாசல் கடந்து, வீதியுலா செல்கிறார்.
சதுரங்கப்பட்டினம், மலைமண்டல பெருமாள், கூவத்துார் ஆதிகேசவ பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
- நமது நிருபர்