அருப்புக்கோட்டை:மார்கழி என்றாலே நினைவுக்கு வருவது குளிர், அதிகாலையில் நடத்தப்படும் பஜனை. அதிகாலை இறைவன் விழித்தெழும் நேரம் என்பதால் தேவர்கள் முன் கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்கின்றனர். இந்த நேரத்தில் சுவாமியை மகிழ்விக்கும் வகையில் மனமுருக பாடினால் தேவர்கள் மன மகிழ்ந்து நம் குடும்பத்தில் ஆரோக்கியம், செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம். அதனால் தான் அதிகாலை நேரத்தில் கடவுளின் திருநாமங்களை சொல்லி பஜனை செய்திடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அந்தவகையில் அருப்புக்கோட்டையில் நுாற்றாண்டு புகழ் வாய்ந்த பாண்டுரங்கன் கோயிலில் 80 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் தொடர்ந்து 30 நாட்களுக்கு பஜனை செய்கின்றனர். காலை 5 :00 மணிக்கு திருப்பாவை, திருவெண்பாவை பாடல்களைபாடி முக்கிய வீதிகள் வழியாக பஜனை செய்கின்றனர்.வயதான பெண்கள் அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்கின்றனர்.