பதிவு செய்த நாள்
07
ஜன
2020
10:01
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று கிருத்திகை விழா ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கக்கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், தமிழகம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஒருமணி நேரம் மழை பெய்ததால், பக்தர்கள் சிரமப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.