பதிவு செய்த நாள்
10
ஜன
2020
11:01
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், 35 ஆயிரம் பக்தர்கள் பூ மிதித்து நேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த டிச.,26ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல், பக்தர்கள் விரதமிருந்தனர். முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அம்மன் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள, 60 அடி நீளமுள்ள குண்டத்தில், குவிக்கப்பட்டிருந்த ஆறு டன் எரிக்கரும்புகள், ஆகமவிதிப்படி நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு நெருப்பு மூட்டினர். பின், கணபதிபாளையம், பதி, நஞ்சை கோபி, தொட்டிபாளையத்தை சேர்ந்த வீரமக்கள் அடங்கிய குழுவினர், 80 பேர் நேற்று காலை, 7:20 மணிக்கு குண்டம் தயார் செய்தனர். பூ மிதிக்கும் பக்தர்கள், வெள்ளாளபாளையம் பிரிவை அடுத்து, திருகினிபாலம் முதல், பாரியூர் கோவில் வரை, இரண்டு கி.மீ., தொலைவுக்கு இரு வரிசையாக நின்றிருந்தனர்.
பூ மிதிக்கும் நிகழ்ச்சி துவக்கமாக காலை, 7:30 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில், குண்டத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின், திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. தலைமை பூசாரி லோகநாதன், ஆகமவிதிப்படி குண்டத்து முன் நின்று, எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் பூக்களை அள்ளி வீசினார். அதை, அங்கு கூடியிருந்த பக்தர்கள் லாவகமாக பிடித்தனர். பின் குண்டத்தில் இருந்த நெருப்பை, தன் இரு கைகளால் அள்ளி வீசி, 7:40 மணிக்கு பக்தி பரவசத்துடன் தலைமை பூசாரி குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து வீரமக்கள், முக்கியஸ்தர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் என வரிசையாக குண்டம் இறங்கினர். 35 ஆயிரம் பக்தர்களுக்கு மேல், நேற்று மதியம், 1:15 மணி வரை, வரிசையாக குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், பூ மிதிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட அதிகமாக இருந்தது. தவிர, திருமணமாகவும், குழந்தை வரம் கேட்டு வேண்டியவர்களும், அதிகளவில் கைக்குழந்தைகளுடன் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மழை பொழிவால், விவசாயம் செழித்து, தொழில் சார்ந்த பிரச்னைக்கு தீர்வு கண்டவர்கள், அதிகளவில் பூ மிதித்ததால், நடப்பாண்டில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.