பதிவு செய்த நாள்
28
ஏப்
2012
10:04
அந்தியூர்: அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள, பூசாரியூர் செம்முனுச்சாமி கோவில் திருவிழா நடந்தது. இந்த ஆண்டு திருவிழா, ஏப்., 13ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஸ்வாமிக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, பூசாரியூர் மடப்பள்ளியில் இருந்து தேரோட்டம் நடந்தது. நான்கு தேர்களை, தோளில் சுமந்து வந்த பக்தர்கள், கோவிலில் பக்தர்களின் வழிபாட்டுக்காக வைத்தனர். நேற்று காலை, பூசாரியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, 3,000க்கும் அதிகமான ஆட்டுக் கிடாக்கள் கொண்டு வரப்பட்டன. மதியம் 2 மணிக்கு பூஜை முடிந்த நிலையில், வனத்தில் கிடாக்களை வெட்ட ஸ்வாமி வாக்கு கொடுத்தார். அதன்பின், பக்தர்கள் கொண்டு வந்திருந்த கிடாக்களை, பூசாரிகள் சளைக்காமல் வெட்டித் தள்ளினர். கிடாக்கள் வெட்ட வெட்ட, நான்கு பூசாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறி ரத்தம் குடித்து வீசினர். இதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்ததுடன், கிடா ரத்தத்தை தொட்டு நெற்றியில் பொட்டிட்டு கொண்டனர். மதியம் 2 மணி முதல், மாலை 3.30 மணி வரை துவங்கிய கிடாக்கள் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. பவானி டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உடல் ஒரு பக்கமும், தலை ஒரு பக்கமும் குவிக்கப்பட்ட கிடாக்கள், இரவு கோவில் பங்குதாரர்களுக்கும், போலீஸாருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டன. அடுத்த வாரம் தேர்த் திருவிழா நடக்கிறது.