நந்தி எப்போதும் சுவாமிக்கு முன்னால் இருப்பது தான் வழக்கம். ஆனால், திருக்குறுக்கை வீரட்டம் (கொருக்கை) என்னும் தலத்தில் சுவாமிக்குப் பின்னும் ஒரு நந்தி உள்ளது. இது வேறெங்கும் இல்லாத அமைப்பாகும். மேற்கு நோக்கியபடி காட்சியளிக்கும் இவர் தீர்க்கவாகு முனிவரால் வழிபாடு செய்யப் பெற்றவர். தீர்க்கவாகு என்பதற்கு நீண்டகைகளைக் கொண்டவர் என்பது பொருள். இவர் சிவ அபிஷேகத்திற்காக கங்கையை விரும்பிக் கைகளை நீட்டிய போது அவை குறுகி விட்டன. அதனால், குறுக்கை என்று பெயர் ஏற்பட்டது. தற்போது பேச்சுவழக்கில் கொருக்கை என்றாகி விட்டது. தெற்குப் பிரகாரத்தில் தீர்க்கவாகுமுனிவருக்கு சந்நிதி உள்ளது. கடுக்காய் மரம் தலவிருட்சம். சிவன் மன்மதனைத் தகனம் செய்ததால் காமதகனபுரம் என்ற பெயரும் உண்டு. மன்மதனின் சாம்பல் இங்கு பங்கு படிந்ததால், கோயில் அருகில் விபூதி நிறத்தில் மணல் படிந்துள்ளது. இங்குள்ள சபைக்கு காமன் அங்க நாசனி சபை என்று பெயர். மூலவர் வீரட்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை ஞானாம்பாள் தெற்குநோக்கி வீற்றிருக்கிறாள். இப்பெருமானைப் போற்றி திருநாவுக்கரசர் பதிகம் பாடியுள்ளார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரனார் தலவரலாற்றினை இயற்றியுள்ளார். மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., தூரத்திலுள்ளது. ஆட்டோ, டாக்சியில் செல்லலாம்.