பதிவு செய்த நாள்
07
பிப்
2020
11:02
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கிட்டம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கிட்டம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் தை மாதம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் இவ்விழா துவங்கியது. விழாவில், பஞ்ச பாண்டர்வர்களான தர்மன், அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி, குந்தியம்மன், போத்தராஜா உள்ளிட்ட உற்சவ மூர்த்தி சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், அம்மன் மற்றும் காளி வேடம் அணிந்து, பூங்கரகம் எடுத்தல் உள்ளிட்டவைகளை எடுத்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து, இக்கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். விழாவில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.