பதிவு செய்த நாள்
07
பிப்
2020
11:02
தர்மபுரி: பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, மாலை, 4:00 மணிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல், மூலவர் மஹாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதை, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.
அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதணை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.