பதிவு செய்த நாள்
11
பிப்
2020
11:02
வடசித்துார், செட்டிபாளையம் செல்லும் ரோட்டில் வேப்பமரத்தடியில், வடக்கு நோக்கி அமைந்துள்ளது 600 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில். திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முன்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பகிரகத்தில், மூன்றடி உயரத்தில் நான்கு கரங்களுடன், அம்மன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மன் காலடியில், 300 ஆண்டுகளுக்கு முன் வேங்கை மரத்திலான அம்மன் சிலையை, மூலவராக இன்றும் மக்கள் வழிபடுகின்றனர்.கோவில் வளாகத்தில், இடது பக்கத்தில் ஐந்தடி உயர மேடையில் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட்ட பிறகே, அம்மனை பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவிலுக்கு வெளியே அம்மனின் சிம்ம வாகனம் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறது.கோவிலில், தினமும் உச்சி கால பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் இரவு நேர பூஜையும் நடக்கிறது. பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மார்கழி மாதம், 30 நாளும் பூஜை நடக்கிறது. அம்மை நோய் தாக்கியவர்கள், கோவில் வளாகத்துக்குள் நுழைந்தாலே, நோயின் தாக்கம் குறைந்துவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.குழந்தை வரம், திருமண தடங்கலுக்கு அம்மனை வணங்குகின்றனர். அமாவாசை நாட்களில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு, மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.
கடந்த, 1826ல் இவ்வழியாக வந்த திருமலை நாயக்கர், அம்மனை வணங்கி, அருகில் உள்ள, தான்தோன்றியம்மன், கண்டியம்மன் கோவிலுக்கு, 40 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியதாக, செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.கும்பாபிஷேகம் முடிந்து, 12 ஆண்டுகளை கடந்து விட்டதால், அடுத்த ஆண்டில் கோவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.