பதிவு செய்த நாள்
11
பிப்
2020
12:02
உடுமலை:மலைத்தொடர்களில் அரிதாக காணப்படும், பெருங்கற்காலத்தை சேர்ந்த கல்திட்டைகளை, உடுமலை அருகே வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெருங்கற்காலத்தில், இறந்தவர்களின் நினைவாக கல்திட்டைகள் அமைக்கப்பட்டு, தற்போது அவை வரலாற்றுச்சின்னமாக ஆய்வாளர் களால் போற்றப்படுகிறது. ஆனால், இவ்வகை கல்திட்டைகள் போதிய விழிப்புணர்வு இல்லாமல், அழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில், பரவலாக கல்திட்டைகள் கண்டறியப்பட்டாலும், மலைத்தொடர்களில் அரிதாகவே உள்ளன.கேரளா மாநிலம், மறையூரில் இத்தகைய வரலாற்றுச்சின்னங்கள், அம்மாநில அரசால் வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் ஆய்வுக்குழுவை சேர்ந்த தென்கொங்கு சதாசிவம் தலைமையிலான குழுவினர், உடுமலை ஆண்டியூர் பகுதியில், கல்திட்டையை கண்டறிந்து ஆய்வு செய்தனர். அக்குழுவினர் கூறியதாவது: கிராம மக்கள் அளித்த தகவல் அடிப்படையில், ஆண்டியூர் அருகேயுள்ள, அக்கா, தங்கை குன்று பகுதியில் ஆய்வு செய்தோம். அப்போது, பெருங்கற்காலத்தைச்சேர்ந்த, 5க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் அப்பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதில், சில திட்டைகள் சிதிலமடைந்துள்ளன.பாலாறு, நல்லாறு உட்பட ஆறுகள் அமைந்துள்ள பகுதியில், வனப்பகுதியை ஒட்டிய மலைக்குன்றில் இந்த கல்திட்டைகள் அமைந்துள்ளன. மலைத்தொடரில், பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து வரலாற்றுச்சின்னமாக இவை அமைந்துள்ளன.பெருங்கற்காலத்துக்கு பிறகு, ஆற்றங்கரை நாகரிகங்கள் அமைந்து, செழிப்புற்று இருந்ததற்கு, சாட்சியமாக இந்த கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில், சிதிலமடைந்த நிலையில், சில நடுகற்கள், சிலைகளும் உள்ளன.அவை குறித்த ஆய்வு தொடர்கிறது. இவ்வாறு, அக்குழுவினர் தெரிவித்தனர். பாலாறு, நல்லாறு செல்லும் வழியோர கிராமங்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில், கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.உடுமலை பகுதியில், காணப்படும் கல்திட்டைகளை பாதுகாக்க, அரசு தொல்லியல் துறை மூலம் நடவடிக்கை எடுத்தால், பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.