பதிவு செய்த நாள்
12
பிப்
2020
11:02
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த, அளேபுரம் அரசு பள்ளி வளாகத்தில், 500 ஆண்டுகள் பழமையான, 27 செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில், கிருஷ்ண தேவராயர் காலகட்டத்தில் கட்டப்பட்ட லட்சுமி நரசிம்ம கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்குள்ள விளையாட்டு மைதானத்தில், கடந்த இரண்டு மாதத்தில் மட்டும், 27 செம்பு நாணயங்கள் கிடைத்துள்ளன. இதை, அப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர்கள் முருகா, கணேசன் ஆகியோர் இணையதளத்தில் ஆய்வு செய்ததில், இது மைசூர் மன்னர் திப்பு சுல்தான், கிருஷ்ணராஜ உடையர், விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர், பிற்கால சோழர்கால நாணயங்கள் என தெரிந்தது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சந்திரசேகரை அழைத்து ஆய்வு செய்தபோது, அந்த நாணயங்கள், 500 ஆண்டுகள் பழமையானது என தெரிய வந்தது. அங்குள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோவில், கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்டு இருந்தாலும், அதன்பின் திப்புசுல்தான் காலத்தில், அவரது கட்டுபாட்டில் இருந்ததால், இது அவரது காலத்திய நாணயங்களாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாணயங்களில், குதிரை, யானை, சிற்றரசர்களின் உருவங்கள், அங்குள்ள நரசிம்ம சுவாமி கோவில் சிலைகளின் உருவம் மற்றும், உருது மொழி ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. பல வரலாற்று தகவல்கள் புதைந்துள்ளதால், தொல்லியல் மற்றும் வரலாற்று மாணவர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்ய, அப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.