பதிவு செய்த நாள்
02
மே
2012
11:05
கோவை: எவன் ஒருவன் பகவானை எண்ணி தியானிப்பதிலும், பூஜிப்பதிலும் ஆனந்தத்தை அடைகிறானோ, அவனுக்கு ராமன் என்று பெயர். ராமன் என்ற பெயர், ராமன் பிறப்பதற்கு முன்பாகவே வேதத்தில் உள்ளது. அந்த பெயரை தான் தசரதன், தன் மகனுக்கு சூட்டி னான் என, அர்ஷ வித்யா குருகுல பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமி பேசினார். கோவையில், ஆஸ்திக சமாஜம் சார்பில், நாம பிரசார வைபவ விழா நடந்தது. அர்ஷ வித்யா குருகுல பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமி, துவக்கி வைத்து பேசியதாவது: இந்த கலியுகத்தில் பிறந்த அனைவருக்கும் பாவம், புண்ணியம் இரண்டும் உண்டு. இவை இரண்டும், கலந்து இருந்தால்தான், மனித ஜென்மம் கிடைக்கும். தங்கள் வாழ்க்கையில் செய்த பாவங்களை போக்க வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தவறாமல் அக்னி கோத்திர நித்திய கர்மாவைசெய்ய வேண்டும். நித்திய கர்மா என்றால் "விதிக்கிரியா என்று வேதம் சொல்கிறது. இந்த கலியுகத்தில் பிறந்தவர்கள் செய்வார்களா? அது சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. செய்ய முடியாதவர்களுக்கு, ஒரு விதி விலக்கு அளிக்கப்படுகிறது. நித்திய கர்மாவை செய்ய முடியாதவர்கள், தினமும் ஹரி நாமத்தை உச்சரித்தால் போதும் என்று, உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது.
எவன் ஒருவன் பகவானை எண்ணி தியானிப்பதிலும், பூஜிப்பதிலும் ஆனந்தத்தை அடைகிறானோ, அவனுக்கு ராமன் என்று பெயர். ராமன் என்ற பெயர், ராமன் பிறப்பதற்கு முன்பாகவே, வேதத்தில் உள்ளது. அந்த பெயரைதான் தசரதன், தன் மகனுக்கு சூட்டினான். "ஓம் நமச்சிவாயம் என்றால், சிவனுக்கு என் நமஸ்காரம் என்று அர்த்தம். அந்த வார்த்தையின் பொருள் நமக்கு புரிகிறது. ஆனால், ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்ற வார்த்தைகளில் என்ன பொருள் புரிகிறது. ஹரே ராமா என்றால் தமிழில் ஓ ராமா என்று அர்த்தம். பக்தன் ஓ ராமா ஓ கிருஷ்ணா என்று பகவானை அழைக்கிறான், பகவானிடம் அவன் என்ன கேட்கிறான் என்ற பொருள் அதில் இல்லை. அந்த வாக்கியம் முடிவு பெறாமல் இருக்கிறது. இதை மகா மந்திரம் என்று வேறு சொல்கிறார்ளே என்று ஆரம்பகாலத்தில் எனக்கு குழப்பமாக இருந்தது. நான் சென்னையில் இருந்தபோது, முதல் முறையாக உத்திர காசிக்கு தெய்வ தரிசனம் செய்யச் சென்றேன். சென்னை ரயில் நிலையத்தில் வண்டி ஏறிய போது, அங்கு உணவு பண்டங்களை விற்பவர்கள் இட்லி, வடை, பூரி, டீ, காபி என்று உணவுகளின் பெயரை சொல்லி விற்பனை செய்தார்கள். மறுநாள் வட மாநிலத்தில் உள்ள ரயில் நலையத்தில் வண்டி நின்ற போது, அங்குள்ளவர்கள் பூரி வாலா, சாயா வாலா என்று மட்டுமே சொன்னார்கள். பயணிகள் பணத்தை கொடுத்தால் அவர்கள் பண்டத்தை கொடுக்கிறார்கள். அவ்வளவுதான் வேறு எதுவும் அவர்கள் பேசுவதில்லை. அப்போதுதான் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்ற வார்தைகளுக்கு எனக்கு அர்த்தம் புரிந்து. பாவங்களை ஒழிப்பவனுக்கு ஹரி என்று பெயர், ஹரி என்ற நாமத்தை சொன்னாலே போதும், நம் பாவங்களை தீர்க்க வேண்டியது பகவானின் கடமை. அதற்கு மேல், வேறு எதுவும் சொல்ல வேண்டாம். அந்த நாமத்திற்கு, அவ்வளவு பெரிய அர்த்தம் இருக்கிறது. ராம நாமத்தை, கிருஷ்ண நாமத்தை இசையோடும், ராகத்தோடும் கீர்த்தனைகளாக பாடினால் தெய்வீகமாக இருக்கும். இந்த நாமகீர்த்தன வைபவத்தில், அனைவருக்கும் தெய்வீக இன்பம் கிடைக்க, ஆசீர்வதிக்கிறேன்.இவ்வாறு, தயானந்த சரஸ்வதி சுவாமி பேசினார். கே.ஜி., மருத்துவமனை டாக்டர் பக்தவத்சலம், கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நிர்வாக இயக்குனர் தனுஷ்கரன், மகாராஷ்ட்ர சுபங்க ரத்தினா கணேஷ்குமார், சிட்டி யூனியன் வங்கி துணைமேலாளர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.