ராமர் கோயில் வடிவமைப்பு மாறுகிறது மூன்றாவது மாடி கட்ட முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2020 11:02
புதுடில்லி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்தில் புதிய மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று ராமர் கோயில்கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ராவை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.இது குறித்து அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: கடந்த 1987ல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் அசோக் சிங்கால் உத்தரவு படி பொறியாளர் சந்திரகாந்த் சோம்புரா ராமர் கோயில் வடிவமைப்பை உருவாக்கித் தந்தார். இதில் சில மாற்றங்களைச் செய்து கோயிலை மேலும் பிரமாண்டமாக எழுப்ப வேண்டும் என பலதரப்பிலும் இருந்து பரிந்துரைகள் வந்தன.இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புதிய திட்டப்படி கோயில் இரண்டு அடுக்கிற்கு பதிலாக மூன்று அடுக்குகள் கட்டப்படும். கோயிலின் உயரம் 125 அடியில் இருந்து 160 அடியாக உயர்த்தப்படும். கோயில் வளாகத்தின் நீளம் 270 அடி; அகலம் 135 அடியாக இருக்கும்.ஒவ்வொரு அடுக்கிலும் 106 துாண்கள் இருக்கும். மரத்தினால் செய்யப்படும் கோயில் கதவுகளில் பளிங்கு கற்கள் பொருத்தப்படும்.தரைத் தளத்தில் கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதா தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதல் தளத்தில் ராம தர்பார் மண்டபம் அமைக்கப்படும். கோயிலுக்கு ஐந்து வழிகளில் வருவதற்கு வசதி செய்யப்படும்.இத்துடன் கோயிலின் வடிவமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக மேலும் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நிருபேந்திர மிஸ்ரா வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து இறுதி வடிவமைப்பை முடிவு செய்வார். அதன் பின் கோயிலின் கட்டுமானப் பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். வக்பு வாரியம் ஏற்பு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உ.பி. அரசு அயோத்தி- லக்னோ நெடுஞ்சாலையில் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலத்தை ஏற்றுக் கொள்வதாக உ.பி.சன்னி மத்திய வக்பு வாரியம் நேற்று அறிவித்தது. அந்நிலத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து 24ம் தேதி முடிவு செய்யப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது. பிரதமர் வேண்டுகோள்: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி அமைதியாக எவ்வித வேறுபாடு அல்லது கசப்புகளுக்கு இடம் தராமல் நிறைவேற்றப்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார் என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.