நத்தம் மாரியம்மன் கோயிலில் கன்னிமார் தீர்த்தம் எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2020 10:02
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து, காப்பு கட்டி விரதம் துவங்கினர்.இக்கோயிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று அதிகாலை முதல் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் கோயிலில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து சந்தனக்கருப்பு கோயிலை அடைந்தனர்.
அங்கிருந்து மேலதாளம் முழங்க தீர்த்த குடங்கள் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி 15 நாட்கள் விரதம் துவங்கினர். வருகிற பிப்.28 ல் மயில் வாகனம், மார்ச் 3 ல் சிம்ம வாகனம், மார்ச் 6 ல் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் அம்மன் மின் அலங்கார ரதத்தில் பவனி செல்கிறார். மார்ச் 8 ல் பால்குடம் எடுத்தல், மறுநாள் அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் காவடி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 10 அன்று அதிகாலை முதல் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வருவர். பகலில் கழுமர ஏற்றம் நடைபெறும். இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் காலை மஞ்சள் நீராட்டு, இரவு அம்மன் பூப்பல்லக்கு நகர்வலத்துடன் விழா நிறைவடைகிறது.