பதிவு செய்த நாள்
02
மார்
2020
12:03
திருவொற்றியூர்: தியாகராஜர் கோவிலில், மாசி பிரம்மோற்சவ திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு, மாசி பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றத்துடன் துவங்கியது. தியாகராஜர் சன்னிதி மண்டபத்தில், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, விசேஷ பூஜைகள், யாகங்கள் நடந்தன.
விநாயகர், உற்சவர் தியாகராஜ சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில், கொடிமரம் அருகே எழுந்தருளி அருள்பாலித்தனர். இரண்டாம் நாளான, நேற்று காலை, சந்திரசேகரர் சூரியபிரபை, இரவு, சந்திரபிரபை வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் உற்சவம், 6ம் தேதியும், 8ம் தேதி காலை, திருக்கல்யாணம், மாலை, 63 நாயன்மார்கள் மாடவீதி உலா, இரவு, மகிழடி சேவை உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கும். கடைசி நாளான, 10ம் தேதி, தியாகராஜர் பந்தம் பறி உற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவு பெறும்.